சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு (எஸ்.இ.இசட்) விதிக்கப்படும் குறைந்தபட்ச மாற்று வரியை (எம்.ஏ.டி.) நீக்க வேண்டும் என்று ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. இதை நீக்குவதன் மூலம் வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும் என்று அந்த கவுன்சில் தெரிவித்திருக்கிறது.
பட்ஜெட்டுக்கு முந்தைய நிதி அமைச்சருடனான கலந் துரையாடலில் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இந்த கோரிக்கையை விடுத்திருக்கிறது. ஒருவேளை குறைந்தபட்ச மாற்று வரியை நீக்க முடியாவிட்டால் அதை 7.50 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மீது விதிக்கப்படும் குறைந்தபட்ச மாற்று வரி மற்றும் டிவிடெண்ட் விநியோக வரி ஆகிய இரண்டும் முதலீட்டு சூழ்நிலையை குறைக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
2011-ம் ஆண்டு லாபமீட்டும் சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டாளர்கள் மீது 18.5 சதவீத குறைந்தபட்ச மாற்று வரியை மத்திய அரசு விதித்தது. இந்த மண்டலங்களை மேம்படுத்துவதற்காக நிறைய சலுகைகளை மத்திய அரசு கொடுத்தது. முன்னதாக பல மேம்பாட்டாளர்கள் தங்களது திட்டங்களை விலகிக்கொண் டார்கள்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஊக்குவிப்பதற்கு நீண்டகால நிலையான பொருளாதார கொள்கைகளை உருவாக்கவேண்டும். இந்த கொள்கைகள் மாற்ற முடியாததாக இருக்க வேண்டும் என்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இதுவரை 566 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் 185 திட்டங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலமாக மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.