பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் பனமா நாட்டில் 500க்கும் மேற்பட்ட இந்திய பிரபலங்களும் பணம் பதுக்கியுள்ளனர் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து பேசிய ஜேட்லி, இந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணம் பதுக்கியுள்ளது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும். அதுவரை நான் தூங்க மாட்டேன் என்றும் கூறினார்.
கடந்த மூன்று நாட்களில் இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கணக்கையும் எது சட்டத்துக்கு உட்பட்டது, சட்ட விரோதமானது என ஆராய்ந்து வருகிறோம் என்றார். தனியார் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதை குறிப்பிட்ட அருண்ஜேட்லி, பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தவிட்டுள்ளதாகவும் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் சட்ட ரீதியான கணக்குகள் எது, சட்டத்துக்குப் புறம்பான கணக்குகள் எது என விசாரிக்கும் வரை இரவில் கூட தூங்க மாட்டேன் என்று கூறினார். அவர்கள் சட்ட விரோதமாக பணத்தை பதுக்கி உள்ளனர் என்று தெரிந்தால் முழுவதுமாக அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்தும் சரிசெய்யப்படும் என்றார்.
பனாமா பேப்பரை முன்வைத்து வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் பிரபலங்கள் பணம் பதுக்கியுள்ளனர் என்பது குறித்து கடந்த நான்கு நாட்களாக சர்வதேச ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றன. சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு உள்பட சர்வதேச அளவில் 100 ஊடகங்கள் இந்த விவகாரத்தை பேசி வருகின்றன.
பனாமாவில் உள்ள சட்ட நிறுவனமான மொசாக் பொன்செக்கா நிறுவனத்தின் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் வெளியாகியுள்ளன. இந்த சட்ட நிறுவனம் புதிய தொழில் நிறுவனங்களின் பதிவு உள்ளிட்ட சேவைகளை செய்து தருகிறது.
சட்ட விரோதமாக பணம் பதுக்கிய தனிநபர் கணக்குகள் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தற்போது முழுமையான விசாரணை, மதிப்பீடு செய்யப்பட்டு, குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஹெஸ்எஸ்பிசி கணக்குகளில் பணம் பதுக்கிய 628 இந்தியர்களில் 500- 525 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், இவர்களில் 150 நபர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதையும் ஜேட்லி சுட்டிக் காட்டினார்.