புதுடெல்லி: ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவு கடந்த மார்ச் மாதத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வசூலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தொடர்ந்து 8-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. தொடர்ந்து 6-வது மாதமாக ரூ.1.30 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் சென்றுள்ளது.
இந்நிலையில், இதுவரை இல்லாத அளவு ஜிஎஸ்டி வசூலில் இந்த மார்ச் மாதம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.1,42,095 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,830 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 32,378 கோடியாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 74,470 கோடியாகவும் (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.39,131 கோடியும் அடங்கும்),செஸ் வரி ரூ.9,417 கோடியாகவும் (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.981 கோடியும் அடங்கும்) உள்ளது.
அதிகபட்ச மாதாந்திர ஜிஎஸ்டி வருவாயாக கடந்த ஜனவரி மாதம் ரூ.1,40,986 கோடி வசூலானது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி, கடந்த ஆண்டு மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலைவிட 15 சதவீதமும், கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலைவிட 46 சதவீதமும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.