உணவுப் பொருள் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் விலைவாசியை சற்று கட்டுப்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார்.
மும்பையில் இன்று நிதித்துறை சட்ட சீர்திருத்த குழுவின் அறிக்கை குறித்து பேசிய செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், "ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதன் விளைவு, விலைவாசி உயர்வாக இருக்கும். ஆனால், விலைவாசி உயர்வை, உணவுப் பொருட்கள் மேலாண்மை மூலம் சற்று கட்டுப்படுத்த முடியும்.
இராக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவு பணவீக்கம் உயர்ந்துள்ளது, ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இது குறித்து கண்காணித்து வருகிறது.
பணவீக்கத்தை சமாளிக்க அடுத்த காலாண்டுகளில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உள்கட்டமைப்பு நிதி மற்றும் பொது நிதி வரத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி முயற்சி செய்யும். உள்கட்டமைப்புக்கு போதுமான நிதியை கொண்டு சேர்ப்பது மற்றும் கொள்கைரீதியான மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி இடையேயான நிதிப் பற்றாக்குறை குறைவாகவே நீடிக்கிறது. இராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் நிலவும் உள்நாட்டு பிரச்சினைகள் இந்தியாவை நேரடியாக பாதிக்காது. இராக்கின் நிலைமை சீரில்லாமல் உள்ளது,
நடப்பு கணக்கு பற்றாக்குறையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. வலுவான அந்நிய செலாவணி கையிருப்பு இருப்பதாக் நாட்டின் நிதி நிலைமை மோசமடையவில்லை. இவை கடந்த ஆண்டு இருந்த நிலைமையை விட மேலாகவே உள்ளது.