நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், பருவ மழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யுமாயின் வட்டிக் குறைப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
பணவீக்கம் தொடர்ந்து கட்டுக்குள் இருந்து குறையும் போக்கு தெரிந்தால் மேலும் வட்டியைக் குறைக்க ரிசர்வ் வங்கி தயங்காது என்றார்.
இம்மாத தொடக்கத்தில் (ஜனவரி) ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வட்டி குறைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக 6.5 சதவீத அளவுக்கு வட்டி குறைந்துள்ளது. 2015-ம் ஆண்டு ஜனவரியிலிருந்து இதுவரை 1.5 சதவீத அளவுக்கு வட்டியை ஆர்பிஐ குறைத்துள்ளது.
இருப்பினும் தொழில் துறை யினர் மேலும் வட்டிக் குறைப்பை எதிர்பார்க்கின்றனர். இதுவரையில் வங்கிகள் வட்டி விகிதத்தை கால் சதவீதம் முதல் அரை சதவீதம் வரை குறைத்துள்ளன.
சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) மற்றும் உலக வங்கி கூட்டங்களில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் வந்துள்ள ராஜன், கடந்த இரண்டு ஆண்டுகளில் பருவ மழை பொய்த்து விட்டது. இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று குறிப்பிட்டார்.
உணவுப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருப்பதற்கு பருவ மழை அவசியம். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துப் போனதால் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார தேக்க நிலை சூழலில் வளர்ச்சியடைந்த நாடுகளே திணறும் நிலையில் இந்தியா மிகச் சிறந்த பொருளாதார நிலைப்பாட்டை எடுத்து அதை செயல்படுத்தி வருகிறது என்று ராஜன் கூறினார்.
இந்தியா தனது பற்றாக்குறை அளவை பெருமளவுக் குறைத்துள்ளது. சர்வதேச அளவில் தேக்க நிலை நிலவிய போதிலும் இந்தியா தனது பொருளாதார நிலையை வெகு நேர்த்தியாகக் கையாண்டது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
சர்வதேச சூழலுக்கேற்ப அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜேனட் யேலனும் மிகச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்று பாராட்டினார்.
பெடரல் ரிசர்வ் எடுத்துள்ள நடவடிக்கை வளரும் நாடுகளின் சந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உரிய வகையில் அணுகியுள்ளது. மேலும் டாலருக்கு நிகரான அந்தந்த நாடுகளின் குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவின் கரன்சி மதிப்பில் நிலவிய ஏற்ற, இறக்க சூழலும் முடிவுக்கு வந்துள்ளதாக ராஜன் கூறினார்.
பெடரல் ரிசர்வ் படிப்படியாக வட்டி விதிக்கும் நடைமுறை செயல்படுத்துவதால் கரன்சியின் மதிப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.