புதுடெல்லி: ஹீரோ மோட்டார்ஸ் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவான் முன்ஜால் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளர் ஹீரோ மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம். ஓராண்டில் யூனிட் அளவு விற்பனையின் அடிப்படையில். உள்நாட்டு இருசக்கர வாகனச் சந்தையில் 50சதவீத பங்குகளை ஹீரோ நிறுவனம் வைத்துள்ளது.
உள்நாடு மட்டுமின்றி சர்வதேச சந்தைகளில் 100 மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் 40 நாடுகளில் ஹீரோ மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது.
சர்வதேச தரத்தில் 8 உற்பத்தி மையங்களை ஹீரோ மோட்டார்ஸ் வைத்துள்ளது. இதில் இந்தியாவில் 6 உற்பத்தி மையங்களும், வங்கதேசம், கொலம்பியாவில் ஒரு உற்பத்தி மையமும் உள்ளன.
பிப்ரவரியில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் மொத்த விற்பனையில்2 9 சதவிகித வீழ்ச்சி கண்டது. இந்தநிலையில் ஹீரோ மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவான் முன்ஜால் இல்லம், அலுவலகம் ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின்அடிப்படையில் இந்த சோதனை நடந்தது. டெல்லி, குருகிராம் உள்ளிட்ட முன்ஜாலுக்கு சொந்தமான 25 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக வருவாய் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எந்தத் தகவலையும் ஹீரோ நிறுவனம் வெளியிடவில்லை.