பெட்ரோல், டீசல் விலை யையும் எண்ணெய் நிறுவனங்கள் நேற்று (மார்ச் 22) உயர்த்தின. இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளன.
இன்று (மார்ச் 23) பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.01க்கும், டீசம் லிட்டருக்கு ரு.96.21க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் இன்று 75 காசுகள் விலையுயர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.91-க்கும், டீசல் ரூ.92.95-க்கும் விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு வரி குறைப்பு செய்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10-ம் குறைத்தது. கடந்தாண்டு நவ.4-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, கடந்த 137 நாட்களாக விலை உயர்த்தப்பட வில்லை.
விலையேற்றத்தால் அதிருப்தி.. எரிபொருளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக ரஷ்யா உள்ளது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், அந்நாட்டில் இருந்து பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்ய அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
இதையடுத்து, ரஷ்யா சலுகை விலை யில் பெட்ரோல், டீசலை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் பெட்ரோல், டீசலை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. சலுகை விலையில் கொள்முதல் செய்தாலும், அதன் பலனை எண்ணெய் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வழங்காமல், விலை ஏற்றி இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.