வணிகம்

பேட்டரி கார் தயாரிப்புக்காக குஜராத்தில் ரூ.10,445 கோடி முதலீடு செய்கிறது மாருதி சுஸுகி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாகனத் தயாரிப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

அந்த வகையில், குஜராத்தில் உள்ள ஆலையில் பேட்டரி வாகனத் தயாரிப்பு மேற்கொள்ள உள்ளதாகவும், இதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.10,445 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைவர் தோஷிஹிரோ சுஸுகி தெரிவித்தார்.

இது தொடர்பான ஒப்பந்தம் பிரமதர் மோடி மற்றும் இந்தியா வந்துள்ள ஜப்பானிய பிரதமர் பியுமியோ கிஷிடா ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானதாக சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இந்தியா - ஜப்பான் பொருளாதார மாநாட்டில் பேசிய சுஸுகி தலைவர் தோஷிஹிரோ கூறும்போது, "கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத வகையிலான சிறிய ரக கார்களைத் தயாரிப்பதே எங்கள் இலக்கு ஆகும். இந்தியாவின் சுயசார்பு கொள்கையை எட்டும்வகையில் தேவையான உதவி களை நிறுவனம் அளிக்கும். அதற்கேற்ப புதிய ரக கார்களின் மூலப் பொருள்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரித்து கொள்முதல் செய்யப்படும்" என்றார்.

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி குஜராத்தில் உள்ள ஆலையில் ரூ.7,300 கோடி முதலீட்டில் பேட்டரி தயாரிப்பு ஆலை 2026-ம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும். இதற்கான முதலீட்டை ஜப்பானின்சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் மேற்கொள்ளும். இத்துடன் மேலும்ரூ.3,100 கோடி தொகையை பேட்டரி வாகன உற்பத்தி அதிகரிப்புக்கு முதலீடு செய்யப்படும் எனத் தெரிகிறது.

- பிடிஐ

SCROLL FOR NEXT