சேலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் பஞ்சாப் மாநிலம் பதின்டா நகருக்கு 555.9 டன் பருத்தி விதைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் சேலம் ரயில்வே கோட்டம் ரூ.30.41 லட்சம் வருவாய் ஈட்டியது.
தெற்கு ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்து மூலம் அதிக வருவாய் ஈட்டி வரும் முக்கிய கோட்டமாக சேலம் ரயில்வே கோட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக, சேலம் ரயில்வே கோட்ட வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளால், சேலம் கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து, தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்கள், ஆவின் பால் பாக்கெட்டுகள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் சரக்கு ரயில்களில் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சேலம் கோட்டத்தின் வருவாய் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதின்டா நகருக்கு 33,341 பைகளில் அடைக்கப்பட்ட 555.9 டன் பருத்தி விதைகள் 24 பார்சல் வேகன் கொண்ட சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் சேலம் ரயில்வே கோட்டம் ரூ.30.41 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது.