புதுடெல்லி: கிரிப்டோகரன்சி சார்ந்த 7 பணமோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருவதாகவும், இதுவரையில் இவ்வழக்குகள் தொடர்பாக ரூ.135 கோடி மதிப்பிலான சொத்துகள் கையகப்படுத்தப் பட்டுள்ளது என்றும் திங்கள்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சிபயன்பாடு அதிகரித்துள்ளது. கருப்புப் பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி பரிவர்த்தனையில் ஈடுபட்டுவருவதாக சமீப காலங்களில் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. வெளிநாட்டு நபர்களின் உதவியோடு இந்த மோசடி நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இத்தகைய கிரிப்டோகரன்சி தொடர்பான பண மோசடி வழக்குகள் குறித்த தகவல்களை பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
அதில் அவர், ‘கிரிப்டோகரன்சி மூலம் கருப்புப் பணத்தை மடைமாற்றி மோசடியில் ஈடுபட்டுவந்தது தொடர்பான 7 வழக்குகளைஅமலாக்கத்துறை விசாரித்து வரு கிறது. இவற்றில் ஒரு வழக்குத் தொடர்பாக 2020-ம் ஆண்டு கைது நடவடிக்கையை அமலாக்கத் துறை மேற்கொண்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.