வணிகம்

சிறப்பு குழந்தைகளுக்கு மருத்துவக் காப்பீடு அறிமுகம்

செய்திப்பிரிவு

சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் அறிமுகம் செய்தது. இது குரூப் பாலிசி ஆகும். நேற்று நடந்த அறிமுக நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த சங்கல்ப் என்ஜிஓவில் உள்ள 241 சிறப்பு குழந்தைகளுக்கும் ஓராண்டுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டது.

இதில் 5 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் உள்ளனர். ஆண்டுக்கு தனிநபர் 1 லட்ச ரூபாய் வரை கிளைம் செய்துகொள்ள முடியும். இது குறித்து ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பிரகாஷிடம் பேசும் போது, ஆரம்பகட்டத்தில் குழு காப்பீட்டுத் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பு குழந்தைகள் (ஆட்டிசம் பாதிப்புக் குள்ளான குழந்தைகள்) பற்றிய போதுமான தகவல் இப்போது இல்லை. அதனால் முதல் கட்டமாக குரூப் பாலிசியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் தனிநபர் பாலிசிகள் அறிமுகம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

முன்னதாக கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் பிரீமியம் வசூல் 2,000 கோடி ரூபாயைத் தாண்டியது. முந்தைய நிதி ஆண்டுடன் (2014-15) ஒப்பிடும் போது 36 சதவீதம் உயர்ந்துள்ளது. அப்போது 1,470 கோடி ரூபாய் மட்டுமே பிரீமியம் வசூல் ஆனது. 69 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்துக்கு உள்ளனர்.

SCROLL FOR NEXT