மும்பை: புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க பேடிஎம் நிறுவனத்துக்கு ஆர்பிஐ தடை விதித்துள்ளது. ஆன்லைன் நிதி பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம்,புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தடை விதித்துள்ளது. 1949-ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டம் விதி 35-ஏ பிரிவின்கீழ் இந்தநடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பான ஐயப்பாடு காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக ஆர்பிஐ கூறியுள்ளது.
நிறுவனத்தின் ஐடி செயல்பாடுகளை தணிக்கை செய்ய தகவல் தொழில்நுட்ப (ஐடி) தணிக்கைக் குழுவை அமைக்குமாறு பேடிஎம் நிறுவனத்தை ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது. ஐடி தணிக்கை நிறுவனம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் புதிய வாடிக்கையாளர்களை அனுமதிப்பதற்கு சிறப்பு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆர்பிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் சிறிய நிதி வங்கி தொடங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கியை இரு தினங்களுக்கு முன் பேடிஎம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் நிறுவன செயல்பாடு குறித்த புகார் எழுந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.