வணிகம்

எல் நினோ தாக்கம்: அரசுக்கு அசோசேம் ஆலோசனை

செய்திப்பிரிவு

பருவ நிலை மாறுபாட்டால் (எல் நினோ) ஏற்படும் பாதிப்பை சமாளிக்க அரசு முன்கூட்டியே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று தொழில்துறை சம்மேளனங்களின் கூட்டமைப்பான அசோசேம் அரசை வலியுறுத்தியுள்ளது.

விளையும் உணவு தானியப் பொருள்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு முன்கூட்டியே எடுக்க வேண்டும். மேலும் உணவுப் பணவீக்கத்தைத் தடுக்க அரசு எடுக்க உள்ள நடவடிக்கைகளை பட்டியலிட வேண்டும் என்று அசோசேம் தலைவர் ராணா கபூர் வலியுறுத்தியுள்ளார்.

உணவுப் பொருள் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அனைத்துப் பகுதிகளுக்கும் உணவுப் பொருள்கள் சீராக விநியோகம் ஆவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் பொருள்களை பாதுகாக்க பயன்படுத்தும் கிடங்குகள் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டும்.

மேலும் பதுக்கல்கார்களை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் வேளாண் உற்பத்தி சந்தை குழு சட்டத்தை (ஏபிஎம்சி) அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக வழக்கமாக பெய்யும் மழை அளவு மற்றும் சில பகுதிகளில் கூடுதலாகவும் பெய்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு எல் நினோ பாதிப்பு காரணமாக பருவ மழை அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பை அளிக்கும் செய்தியாகும்.

இந்தியாவில் விவசாய நிலங்களில் 60 சதவீதம் மழை பாசனப் பகுதியாகும். எல் நினோ பாதிப்பால் குறையும் 5 சதவீத மழை அளவு நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பில் இது 1.80 லட்சம் கோடியாகும். இதனால் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பர் என்று அசோசேம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு சதவீத மழை குறைவால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 0.35 சதவீத அளவுக்கு பாதிக்கப்படும் என்று அசோசேம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கடல் நீர் வெப்பமாவதால் ஏற்படும் எல்நினோ பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வேளாண் உற்பத்தியும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை சரியான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் சமாளிக்க முடியும் என்று அசோசேம் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT