நடப்பாண்டில் பருவமழை எதிர்பார்த்த அளவை விட அதிகமாக இருக்கும் என்கிற அறிவிப்பு பங்குச் சந்தை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 29000 முதல் 35000 புள்ளிகள் என்கிற அளவு வரை உயர்வதற்கு வாய்ப்பிருப்பதாக சந்தை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
முன்னணி பண்ட் மேலாளர்கள், சந்தை ஆய்வு நிறுவன தலைவர்கள், பங்குச் சந்தை தரகர்கள் என 35 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், டிசம்பர் மாத இறுதிக்குள் சந்தை 13 சதவீதம் வரை உயரும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவ மழை காலத்தில் எதிர்பார்த்த அளவை விடவும் பருவ மழை தீவிரமாக இருக்கும் என்பதால், சர்வதேச முதலீட்டாளர்கள் வளரும் சந்தை நோக்கி திரும்புவார்கள். இவர்கள் பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடு காரணமாக இந்திய சந்தை கள் ஏற்றம் பெறும். அரசின் நிதிக் கொள்கைகள் சந்தை முதலீடு களுக்கு ஏற்ப எளிதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கருத்து கூறியுள்ளனர்.
இந்த கருத்து கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 26 சதவீதம் பேர் பங்குச் சந்தை ஏற்றம் 30000-35000 புள்ளிகளில் இருக்கும் என்றும், 22 சதவீதம் பேர் 32000-35000 இடைவெளியில் இருக்கும் என்றும், 12 சதவீதம் பேர் 29000-30000 புள்ளிகளாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே சந்தை இயங்கியது. கடந்த புதன்கிழமை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 25625 புள்ளிகளில் முடிந்தது. நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 189 புள்ளிகள் உயர்ந்து 25816 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச் சந்தையான நிப்டி 64 புள்ளிகள் ஏற்றம் கண்டு 7914 புள்ளிகளில் முடிந்துள்ளது.