புதுடெல்லி: இந்தியாவிற்கான 2022-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக மூடிஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு உலகளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும், உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப்போட்டது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட பெரிய அளவில் பொருளாதார பாதிப்புக்கு ஆளானது.
இந்தியாவிலும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் பல்வேறு துறைகளில் பலருக்கும் வேலையிழப்பை ஏற்படுத்தியது. சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முடங்கிப்போனது. ஒட்டுமொத்த பொருளாதார சுழற்சியும் நின்று போனது. அதுபோலவே 2-வது கரோனா அலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. அதேசமயம் 3- வது அலையில் பாதிப்புகள் சற்று அதிகமாக இல்லை. கரோனா பாதிப்பு தற்போது குறையத் தொடங்கிய பிறகு இந்திய பொருளாதாரம் மெல்ல மீளத் தொடங்கி வருகிறது.
இந்தநிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக இருக்கும் என பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மூடிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவிற்கான 2022-ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். 2023-ம் ஆண்டில் 5.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று நாங்கள் ஏற்கெனவே தெரிவித்ததை மீண்டும் உறுதி செய்கிறோம்.
2022 காலண்டர் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும். ஏப்ரல் 1 முதல் வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதமாக இருக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொருளாதார சூழற்சியில் சிக்கல் இருக்கும். இது 2022-23 நிதியாண்டுகளில் 8.4 சதவீதமாகவும், 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கும்.
கடந்த 2022-23 நிதியாண்டு நவம்பரில் இந்தியாவின் பொருளாதாரம் 7.9 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கணித்திருந்தோம். அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.2 சதவீதமாக வளர்ச்சியடையும்.
கரோனா தொற்று பரவலின்போது முதல் அலையின் லாக்டவுனின் போது பொருளதாாரம் சரிவடைந்து மீண்டெழ சற்று காலதாமதமானது. ஆனால் இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பொருளாதாரம் கோவிட்டுக்கு முந்தைய ஜிடிபி அளவை 5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல், சில்லறை வணிகம் உயர்வு போன்றவை காரணமாக பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனத் தெரிகிறது. மற்ற பல நாடுகளில் உள்ளதைப் போலவே, தொடர்பு தீவிர சேவைத் துறைகளில் பொருளாதார மீட்பு தேக்கமடைந்துள்ளது. அதேசமயம் ஒமைக்ரான் அலை குறையும்போது சேவைத்துறைகளிலும் வளர்ச்சி அதிகரிக்கும்.
பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருவதால் சேவைத்துறை வேகமெடுக்கலாம். இப்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் இந்தியா இயல்பு நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.
2022-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது. 2022-23 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9 சதவீதமாகவும், மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீடு 36 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் தனியார் முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். ரிசர்வ் வங்கி பிப்ரவரி கூட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்றாமல் விட்டுவிட்டதால் இதற்கு ஏற்ப தனியார் முதலீடு உயர வாய்ப்புண்டு.
ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். வளர்ச்சி வேகம் தொடர்ந்து மேம்படும். இதனால் நாங்கள் முன் வைக்கும் வளர்ச்சி விகிதம் சாத்தியமாக இருக்கக்கூடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.