புதுடெல்லி: நாட்டின் மிகப் பெரிய வங்கி கடன் மோசடியாக கருதப்படும் ஏபிஜி ஷிப்யார்டு வங்கி மோசடி வழக்கில் அதன் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 28 வங்கிகளில் பெற்ற ரூ.22,842 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு நிகழ்ந்த இந்த மோசடியின்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் பதவியில் இருந்தது. அடுத்த ஆண்டு இந்தத் தொகையானது வாராக் கடனாக சேர்க்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த வழக்கு இந்தியாவின் மிகப் பெரிய வங்கிக் கடன் மோசடி என்று கூறப்படுகிறது. வங்கி மோசடி தொடர்பான வழக்கில் மிக அதிகமான தொகை கொண்ட வழக்கு இதுவாகும்.
இந்த மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குறைவான காலத்திலேயே விசாரணையை நடத்தி குற்றத்தை பதிவுசெய்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘2013-ம் ஆண்டில் வழங்கப்பட்ட கடன் குறித்து எதிர்க்கட்சிகள் கோஷம் போடுகின்றன. இந்த மோசடி பிரதமர் மோடி ஆட்சியில் நிகழ்ந்தது போன்று சித்தரிக்க முயற்சிக்கின்றன. ஆனால் உண்மையில் மோசடி நிகழ்ந்தது 2013-ம் ஆண்டு. 2014-ம் ஆண்டில் வாராக் கடனாக மாற்றப்பட்டது. பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இவை நிகழ்ந்துவிட்டன’’ எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில, ரூ.23,000 கோடி வங்கி மோசடி வழக்கில் ஏபிஜி ஷிப்யார்டின் உரிமையாளர்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
அமலாக்க அதிகாரிகளால் தேடப்படும் எந்தவொரு நபரும் விமான நிலையங்கள் வழியாக நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் பொருட்டு இந்த லுக்அவுட் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. இதன்படி அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி மற்றும் அஸ்வினி குமார் ஆகியோர் தப்பிச் செல்வதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.