புதுடெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் சில்லறை பணவீக்கம் ஜனவரி 2022ல் 7 மாதங்களுக்கு பிறகு உச்ச அளவான 6.01 சதவீதத்தை எட்டியுள்ளது.
2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் சில்லறை பணவீக்கம் அதிகப்படியாக 6.60 சதவீதமாக உயர்ந்து இருந்தது. தற்போது 7 மாதத்திற்குப் பின் முதல் முறையாக 6 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
சில்லறை பணவீக்க உயர்வுக்கு உணவுப் பொருட்கள் முக்கியக் காரணமாக உள்ளது. டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் ஜனவரி மாதம் தானியங்கள், முட்டை, பால் விலை அதிகரித்துள்ளது.
ஆனால் நாட்டின் சில்லறை பணவீக்கம் 6 சதவீதம் என்ற அளவில் உயர்வதால் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் ரிசர்வ் வங்கி முன்கூட்டியே கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
உயரும் கச்சா எண்ணெய் விலை
எனினும் உக்ரைன் விவகாரத்தை தொடர்ந்து தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது புதிய எச்சரிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை தற்போது ஒரு பீப்பாய் 95 டாலரை எட்டியுள்ளது.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோலிய பொருட்களின் விலையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசை பொறுத்தவரையில் ஒன்று பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் அல்லது அதற்கு ஏற்ப கலால் வரியில் மாற்றங்கள் செய்ய வேண்டும். மார்ச் முதல் பணவீக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதில் பெட்ரோலிய பொருட்களின் விலை முக்கியமானதாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரிக்வொர்க் ரேட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகரும், பதினான்காவது நிதி ஆணையத்தின் உறுப்பினருமான எம் கோவிந்த ராவ் இதுகுறித்து கூறியதாவது:
‘எரிபொருள் பணவீக்கம் டிசம்பரில் 10.95% இலிருந்து 9.32% ஆக குறைந்தாலும் வரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது முக்கிய காரணியாக அமையக்கூடும்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வது பணவீக்கத்தை தூண்டும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது நிலவும் உக்ரைன் நெருக்கடியானது சர்வதேச கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு வரும் மாதங்களில் கலால் வரிகளை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காலணிகளுக்கு ஜிஎஸ்டி உயர்வு
இதுபோலவே ஜனவரி மாத பணவீக்க உயர்வுக்கு காலணிகளுக்கான ஜிஸ்டி வரி உயர்த்தப்பட்டதும் காரணமாக அமைந்துள்ளது. ஆடைகள் மற்றும் காலணிகளின் பணவீக்கம் டிசம்பரில் 8.3% ஆக இருந்து ஜனவரியில் 8.84% ஆக அதிகரித்துள்ளது.
காலணி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் காரணமாக ஜனவரி பணவீக்கம் உயர்ந்துள்ளது. டிசம்பரின் பிற்பகுதியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு ஜனவரி 1 முதல் ஆடைகள் மீதான ஜிஎஸ்டி உயர்வு முன்மொழியப்பட்டது. பின்னர் ஜவுளித்துறையினரின் வேண்டுகோளை ஏற்று ரத்து செய்யப்பட்டது.
ஏறுமுகம்- உடனடியாக குறையாது
இதுகுறித்து பாங்க் ஆஃப் பரோடா தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறியதாவது:
உணவுப் பணவீக்கம் முக்கியமாக அதிகரிக்க சமையல் எண்ணெய்களின் விலை காரணமாக உள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 5.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் பணவீக்கம் 6 சதவீதமாக உள்ளது. அதேசமயம் ஹரியாணாவில் 7.2% என்ற உச்சத்தில் உள்ளது.
இந்த விலைகள் அதிகபட்ச சில்லறை விலைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை. இவை ஒரு முறை அதிகரித்தால் குறையாது. மேலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நுகர்வோருக்கு அதிக வாங்கும் தேவை இருப்பதால் அது சார்ந்து பணவீக்கமும் உயர வாய்ப்புண்டு.
ஆடை, எரிபொருள் மற்றும் விளக்குகள், வீட்டுப் பொருட்கள், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு போன்ற உணவு அல்லாத பிரிவுகளில் 6 சதவீதத்திற்கும் மேலாக பணவீக்கம் அதிகமாக உள்ளது.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சில்லறை பணவீக்கம் மீண்டும் 5% வரம்பிற்கு சரியக்கூடும் என்றாலும், தேர்தல்கள் முடிந்த பிறகு மார்ச் மாதத்தில் எரிபொருள் விலையில் புதிய உயர்வு ஏற்படக்கூடும் என்பதால் முக்கியமான தருணத்தில் நாம் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உற்பத்தியாளர்களின் செலவை குறிக்கும் மொத்த விலை பணவீக்கம், ஜனவரியில் 12.96% ஆக உள்ளது. இது தொடர்ச்சியாக பத்தாவது மாதமாக இரட்டை இலக்கங்களுக்கு மேல் இருந்தது.
மொத்த விற்பனை அளவில் உணவுப் பணவீக்கம் 24 மாதங்களில் இல்லாத அளவுக்கு 9.6% ஆக உயர்ந்துள்ளது.
வங்கி வட்டி உயரும்?
ஐசிஆர்ஏ தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் இதுகுறித்து கூறியதாவது:
நடப்பு காலாண்டில் சில்லறை பணவீக்கம் உச்சத்தை எட்டினாலும் அது உடனடியாக குறைய வாய்ப்பில்லை. இப்போது ஜூன் 2022 இல் நிதிக் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங்கள் வரலாம். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் அக்டோபரில் வங்கி வட்டி விகிதம் தலா 25 அடிப்படை புள்ளிகள் கொண்ட இரண்டு ரெப்போ ரேட் உயர்வுகள் இருக்கும். 2022-23 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பணவீக்கம் கணிசமாகக் குறையாது. தற்போது வரும் புள்ளி விவரங்களும் எங்கள் கணிப்பின்படியே உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடுமுழுவதும் கரோனா 3-வது அலை வெகுவாக குறைந்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பி வருகிறது. இதனால் பொருளதார சுழற்சி வேகமெடுக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அடுத்த சில மாதங்களுக்கு நாட்டின் விலைவாசி என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.