புதுடெல்லி: ஜனவரி மாத பணவீக்க விகிதம் 6 சதவீதம் அளவில் இருக்கும், இதனால் எந்த பீதியும் வேண்டாம் என மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
அண்மையில் மத்திய ரிசர்வ் வங்கியின் 2 மாத நிதிக் கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர் சக்திகாந்த தாஸ் ‘‘கரோனா பேரிடர், பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது. மேலும், சர்வதேச அளவில் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதுபோன்ற சாதகமற்ற அம்சங்களை கருத்தில் கொள்ளும்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் எதிர்பார்க்கப்பட்ட 9.2 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது குறைவான விகிதமாகும்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் சில்லறைப் பணவீக்கமானது 5.3 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள 2022-23-ஆம் நிதியாண்டில் பிறகு குறையும்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வங்கியின் குழுவுடனான வழக்கமான பட்ஜெட் கூட்டத்திற்குப் பிறகு சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் ஜனவரி மாத பணவீக்க விகிதம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 6 சதவீதம் அளவிலேயே இருக்கும். இதனால் எந்த பீதியும் வேண்டாம்
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜனவரியில் 6.0% ஆக அதிகரித்திருக்கலாம். அதிக நுகர்வோர் பொருட்கள், தொலைத்தொடர்பு சார்ந்த விலை உயர்வு காரணமாக இருக்கலாம். ஒரு வருடத்திற்கு முன்பு ஒப்பீட்டளவில் குறைந்த விகிதத்தால் பணவீக்கம் இருந்ததாக புள்ளி விவரங்கள் இருக்கின்றன.
அடுத்த நிதியாண்டுக்கான கடன் வாங்கும் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது. அதே நேரத்தில் உலகளாவிய பத்திரக் குறியீடுகளில் நாட்டைச் சேர்ப்பதும் எங்களது இலக்காக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.