வணிகம்

நிதி ஸ்திரத்தன்மைக்கு க்ரிப்டோகரன்சியால் அச்சுறுத்தல்: ரிசர்வ் வங்கி கவர்னர்

செய்திப்பிரிவு

மும்பை: க்ரிப்டோகரன்சிகளால் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையை வெளியிட்டுப் பேசிய அவர், "தனியார் க்ரிப்டோகரன்சிகளால் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவற்றில் முதலீடு செய்வோர் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் தங்களது சொந்த ரிஸ்கில் செய்கின்றனர் என்பதை உணர்ந்து முதலீடு செய்ய வேண்டும். மேலும், க்ரிப்டோகரன்சிகளுக்கு தனியாக அடிப்படை மதிப்பு என்று ஏதுமில்லை என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.

ரிசர்வ் வங்கி தனது சொந்தமான மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (CBDC)-ஐ கொண்டுவர முயற்சிக்கிறது. அதனை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் மேற்கொண்டுள்ளோம். ஏனெனில், இதில் நிறைய ஆபத்துகள் உள்ளன. முதல் பெரிய சவால், டிஜிட்டல் கரன்சிக்களை போலியாக உருவாக்கிவிடக் கூடாது என்பதே” என்றார்.

அடுத்த நிதியாண்டிற்குள் டிஜிட்டல் கரன்சியை புழக்கத்துக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது நினைவுகூரத்தக்கது.

ஜிடிபி 7.8%...

இதனிடையே, ரெப்போ விகிதம் 4% சதவீதமாகவே தொடரும் என்றும், 2022-23-ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 7.8% ஆக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

இரு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தியாவின் பொருளாதாரம் மிகவேகமாக வளர்ந்து வருகிறது என்று ஐஎம்எஃப் குறிப்பிட்டுள்ளது. கரோனா தடுப்பூசி பரவலாக போடப்பட்டதும், சரியான நிதிக் கொள்கையின் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது. 2022-23-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சி வரும் நிதி ஆண்டின் முதல்காலாண்டில் 17.2%, இரண்டாம் காலாண்டில் 7%, மூன்றாம் காலாண்டில் 4.3%, நான்காவது காலாண்டில் 4.5% அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தைப் பொருத்த வரையில், நடப்பு நிதி ஆண்டில் சில்லறை பணவீக்கம் 5.3 சதவீதமாகவும், வரும் நிதி ஆண்டில் 4.5 சதவீதமாகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT