பாதுகாப்புத் துறையில் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொழில்துறை அமைப்புகளின் கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் ராணுவத்துக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அந்நிய முதலீட்டு வரம்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்த நிலையை விட கூடுதலாக அனுமதிக்க முடியாது என தெரிவித்தது.
இந்த அறிவிப்பானது, ஸ்திரமான கொள்கை இத்துறையில் இல்லை என்பதையே காட்டுகிறது. அதிக அந்நிய முதலீடுகளை ஈர்க்க வேண்டுமெனில் அதற்கேற்ப கொள்கை முடிவுகள் இருக்க வேண்டும் என்று அசோசேம் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த அறிவிப்பால் இத்தொழி லில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் செயல்பாடு ஸ்தம்பித்தது. மேலும் உள்நாட்டில் இத்தொழிலில் ஈடுபட முன்வரும் தனியார் நிறுவனங் களுக்கு லைசென்ஸ் அளிப்பதும் நின்றுபோனது. பல உள்நாட்டு நிறுவனங்கள் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பிடம் லைசென்ஸ் கோரியுள்ளன. இந்நிறுவனங்கள் பலதரப்பட்ட ராணுவ தளவா டங்கள் தயாரிப்புக்காக விண்ணப்பித்துள்ளன.
இந்நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகும். அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டை (எப்ஐஐ) ஊக்குவிப்பது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்காகும் என்றும் அசோசேம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய நிறுவனங்களில் அதிகாரம் செய்யும் உரிமை அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்குக் கிடையாது. மேலும் அந்நிய நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க பல்வேறு வழிமுறைகள் இங்கு உள்ளன. ஏற்கெனவே இங்கு உள்ள கொள்கைகள் நமது தொழிலைக் காக்கும் வகையில் உள்ளன என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
இத்தகைய சூழலில் பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடுகள் செய்வதற்கேற்ப விதிகளை வகுக்க வேண்டும். அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பது சிரமமான விஷயம். மேலும் இத்தொழிலில் ஈடுபட் டுள்ள இந்திய நிறுவனங்கள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அனுமதி வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அசோசேம் குறிப்பிட்டுள்ளது.
மிகவும் நுட்பமான இத்துறையில் உள்ள திட்டப் பணிகளை விரைவு படுத்தவேண்டும். அதன்மூலம்தான் பாதுகாப்புத் துறை பொருள்களுக்கு வெளி நாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலையில் மாற்றம் ஏற்படும் என்று அசோசேம் தெரிவித்துள்ளது.