சென்னை: பாங்க் ஆஃப் இந்தியா கடந்த டிச.31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கியின் நிகர லாபம் 90.02 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.1,027 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.541 கோடியாக இருந்தது. சொத்துகளின் மீதான வருவாய் 0.51 சதவீதம் உயர்ந்துள்ளது; இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 23 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும். பங்குகளின் மூலமான வருவாய் 205 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 11.59 சதவீதமாக உள்ளது.
அதேசமயம் வாராக்கடன் விகிதம் 2.66 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்குகள் கடந்த ஆண்டைவிட 10.74 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. நிகர வட்டி வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.3,739 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.3,408 கோடியாக உள்ளது. வட்டியல்லாத வருவாய் ரூ.1,835 கோடியாக உள்ளது.
வங்கி சேவைகளை மின்னணு மயமாக்கியதன் விளைவாகக் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் 74.1 லட்சமாக இருந்த நெட் பாங்கிங் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, தற்போது 81.8 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல செல்போன் மூலம் வங்கிக் கணக்கை இயக்குபவர்களின் எண்ணிக்கை 38.9 லட்சத்திலிருந்து 56.1 லட்சமாகவும், யூபிஐ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 90.1 லட்சத்திலிருந்து 1.23 கோடியாகவும் அதிகரித்துள்ளனர்.
இவ்வாறு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.