கார்களில் ஆறு காற்றுப்பைகளைப் பொருத்துவதைக் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தப் புதிய விதிமுறைகள் குறித்து மக்களிடமும் கருத்துகளை கேட்டு வருகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட தகவல்: கார்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பைக் கூட்டுவதற்காக, கார்களுக்குள் காற்றுப் பைகள் பொறுத்தப்படுவது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அவ்வப்போது விதிமுறைகளை உருவாக்கி வருகிறது. தற்போதுள்ள மாடல்களில் இவற்றைப் பொறுத்துவதற்கான கால வரம்பு 2021 டிசம்பர் 31 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தக் காலவரம்பை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை நீட்டித்துள்ளது. 2022, ஜனவரி 14 அன்று வெளியிடப்பட்ட சட்டரீதியான பொது விதிகள் 16 இ-ன்படி 2022 அக்டோபர் 1 க்குப் பிறகு தயாரிக்கப்படும் எம்1 வகையிலான வாகனங்கள் குறித்த விதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
இத்தகைய கார்களில் முன்பக்கம் ஓட்டுநர் மற்றும் அவருக்கு அருகில் உள்ள பயணி ஆகியோருக்கு 2 காற்றுப்பைகளும், காரின் நடுப்பகுதியின் இரண்டு ஓரங்களிலும், பின்பகுதியின் இரண்டு ஓரங்களிலும் என நான்கு காற்றுப் பைகளும் பொருத்தப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் குறித்து கருத்துக்கள் மற்றும் ஆட்சேபங்களை சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் 30 நாட்களுக்குள் கோரப்பட்டுள்ளது.