வணிகம்

கிரிப்ட்டோகரன்சி வருவாய்க்கு 30 சதவீத வரி: பட்ஜெட்டில் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கிரிப்ட்டோகரன்சி உட்பட மெய்நிகர் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் தற்போது செயல்பாட்டில் இருக்கிறது. இதில் உள்ள ஆபத்து காரணமாக தனியார் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை அறிவிக்கவும், ரிசர்வ் வங்கியின் பிரத்யேக கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அதன்படி புதிய கிரிப்ட்டோகரன்சியை மத்திய ரிசர்வ் வங்கியே வெளியிடும் எனத் தகவல்கள் வெளியாகின. மேலும் கிரிப்ட்டோகரன்சியை ஒழுங்குப்படுத்த சட்டம் கொண்டு வரவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

கிரிப்ட்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 என்ற பெயரில் இந்த மசோதா உருவாக்கப்படுகிறது. இந்தநிலையில் கிரிப்ட்டோகரன்சியை ஒழுங்குப்படுத்தும் சில அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரையில் ‘‘மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு ஒரு சதவீத வரி பிடித்தம் மேற்கொள்ளப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிரிப்ட்டோகரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு வருமான வரி விதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கிரிப்ட்டோகரன்சியை பரிமாற்றம் செய்வதற்கும் 1 சதவீதம் வரி விதிக்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பட்ஜெட் அறிவிப்பு குறித்து நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில் ‘‘கிரிப்டோஸ் போன்ற மெய்நிகர் சொத்துக்கள் தடை செய்யப்படாது, ஆனால் மற்றொரு சொத்து வகுப்பாகக் கருதப்பட்டு மூலதன ஆதாயத்தின் மீது 30% வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஒழுங்குமுறைக்கு சென்றுள்ளது, இது கிரிப்டோ போன்ற புதிய சொத்துகளுக்கு நல்லது’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT