ஸ்விஸ் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய கடன் தொகையை மூன்று வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமான பராமரிப்பு, பழுது நீக்குதல் மற்றும் விமான உதிரிபாகங்கள் சப்ளை தொடர்பாக ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ. 180 கோடி அளிக்க வேண்டியுள்ளது.
இத்தொகையை வழங்காமல் கால தாமதம் செய்ததால் அந்நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பான வழக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது அப்போது டிசம்பர் 6-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை அளிக்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கலாம் என்றும் தீர்ப்பளித்திருந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போபன்னா, ஹிமா கோலி ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மிகவும் பிசியான ஏர்லைன் என்பதால் நிலுவைத் தொகை தராமல் இருக்கிறீர்களா. நிறுவனத்தை நடத்துவதாக உத்தேசம் உள்ளதா அல்லது மூடும் எண்ணத்தில் இருக்கிறீர்களா என்று தலைமை நீதிபதி ரமணா, ஸ்பைஸ்ஜெட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.
இந்த பிரச்சினைக்கு மூன்று வாரங்களுக்குள் தீர்வு காண்பதாக ஹரீஷ் சால்வே கூறினார். இதையடுத்து மூன்று வார கால அவகாசம் அளிப்பதாக நீதிபதிகள் கூறினர். எஸ்ஆர் டெக்னிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை வசூலிக்கும் பொறுப்பு கிரெடிட் சூயிஸ் ஏஜி நிறுவனத்திடம் அளிக்கப்பட்டிருந்தது. அந்நிறுவனம் நிலுவைத் தொகையை வசூலிக்க நீதிமன்றத்தை நாடியது.
நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை தராமலிருப்பது மிகவும் மோசமான செயல். விமான நிறுவனத்தை தொடர்ந்து நடத்த விரும்புகிறீர்களா அல்லது, திவால் எனக் கூறி அதற்குரிய நடவடிக்கையை எடுக்கப்போகிறீர்களா என்று நீதிபதி கேட்டார்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணை தொடங்கியபோது நீதிபதிகளிடம் இந்த வழக்கை மூன்றுவார காலத்துக்கு தள்ளி வைக்குமாறு ஹரீஷ் சால்வே கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.
இந்த வழக்கில் ஜூரிச் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன் வாதிடுகையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எந்தவித உபயோகமான உத்திரவாதத்தையும் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். அவர்கள் திரும்பத் தருவதாகக் கூறும் தொகை குறிப்பிடும் வகையில்கூட இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும் மூன்றுவார கால அவகாசத்தை ஏற்பதாக அவர் நீதிபதிகளிடம் கூறினார்.
இதனிடையே சென்னை நீதிமன்றத்தில் ரூ. 37 கோடியை செலுத்தியது. இதனால் ஜனவரி 28-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.