வணிகம்

‘‘உலகத் தரம் வாய்ந்த விமான சேவையை வழங்குவோம்’’- ஏர் இந்தியாவை வாங்கிய டாடா நிறுவனம் நம்பிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஏர் இந்தியாவை மீண்டும் திரும்ப பெற்றள்ள நிலையில் உலகத் தரம் வாய்ந்த விமான சேவையை வழங்குவோம் என டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் இன்று மத்திய அரசு இன்று முறைப்படி ஒப்படைத்தது. இதற்காக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்து பேசினார்.

ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. கடந்த 1953-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. தற்போது கடும் நஷ்டத்தில் சிக்கி தவித்து வருகிறது. அதனை வாங்க ஆளில்லாமல் இருந்தது.

பின்னர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.

டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் வாங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

ஏர் இந்தியாவை வாங்க தலேஸ் நிறுவனம் குறிப்பிட்ட மதிப்பு 18,000 கோடி ரூபாய் ஆகும். இதில் 15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனுக்கான பாகமாகும், மீதமுள்ளவை மத்திய அரசுக்கு செலுத்தப்படும்.

இந்தநிலையில் ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் இன்று மத்திய அரசு இன்று முறைப்படி ஒப்படைத்தது.

டாடா குழுமம் ஏர் இந்தியாவின் உரிமைகளை மத்திய அரசிடம் இருந்து ஒப்படைக்கும் முன்பாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்து பேசினார்.

பின்னர் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் கூறியதாவது:

‘‘ஏர் இந்தியாவை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டோம். இந்த ஒப்பந்தம் நிறைவடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏர் இந்தியாவை மீண்டும் டாடா குழுமத்தில் சேர்த்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏர் இந்தியாவை மீண்டும் திரும்பப் பெற்றள்ள நிலையில் உலகத் தரம் வாய்ந்த விமானச் சேவையை உருவாக்க அனைவருடனும் இணைந்து செயல்படுத்த நாங்கள் காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வியாழக்கிழமை ஏர் இந்தியாவை அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம் ஒப்படைத்தவுடன், டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் ஏர் இந்தியாவின் ஊழியர்களை வரவேற்று செய்தியை அனுப்பினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கப்போவதாக அறிவித்த நாள் முதல் அனைவரும் வீடு திரும்புவதைப் பற்றியே பேசி வருகின்றனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியாவை மீண்டும் டாடா குடும்பத்திற்கு வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

1986 டிசம்பரில் நாங்கள் எடுத்த முதல் ஏர் இந்தியா விமானம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்தது என்பதை மறக்கவே முடியாது. நான், பலரைப் போலவே, விமான நிறுவனத்தின் வெற்றிகரமான கடந்த காலத்தின் கதைகளைப் பிரதிபலிக்க விரும்புகிறேன்’’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT