சீனாவில் ரூ. 1,017 கோடி (15.30 கோடி டாலர்) தொகையுடன் மாயமான நிதி நிறுவன அதிபரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த முதலீட்டு ஆலோசனை நிறுவனம் வாங்ஷூ குழுமத்தைச் சேர்ந்தது. இந்நிறுவனத்தின் தலைவர் யாங் வெய்கோ தலைமறைவாகிவிட்டதாக இந்நிறுவனமே தெரிவித்துள்ளது.
ஆயிரம் கோடியுடன் தலைமறைவான நிதி நிறுவன அதிபரைத் தேடும் பணியில் சீன போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிதி நிறுவனத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கடந்த 18-ம் தேதியிலிருந்தே முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
நிதி மோசடி பிரச்சினை பெரிதாக வெடிக்கும் முன்பாகவே இக்குழுமத்துக்குச் சொந்தமான மிகப் பெரிய வணிக வளாகத்தை இந்நிறுவனம் மூடிவிட்டது.
வாங்ஷூ குழுமத்துக்கு 200-க்கும் அதிகமான துணை நிறுவனங்கள் உள்ளன. வர்த்தகம், ஆட்டோமொபைல், மருத்துவம், நிதி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் இக்குழுமம் ஈடுபட்டுள்ளது. 70 நகரங்களில் உள்ள இக்குழும நிறுவனங்களில் 7 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.