தங்கம் டெபாசிட் திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த, அதில் சில மாறுதல்களை மத்திய அரசு செய்திருக்கிறது. தங்கம் டெபாசிட் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தங்கத்தை உருக்கி முதலீடு செய்யப்படும். முதலீடு மற்றும் வட்டியுடன் சேர்ந்து முதிர்வின் போது பணமாக கிடைக்கும். இதன் காரணமாக பலர் இந்த திட்டத் தில் தங்கத்தை முதலீடு செய்வது குறித்து முடிவெடுக்க முடியாமல் இருந்தனர். தங்கம் மீது உணர்வுப் பூர்வமான நெருக்கம் இருப்பதால் பலர் டெபாசிட் செய்ய மறுத்தனர்.
இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, வெள்ளிக்கிழமை இரவு இந்த திட்டத்தில் மாற்றம் செய்தது. அதன் படி, நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் தங்கம் டெபாசிட் செய்யும் பட்சத்தில் முதிர்வின் போது இந்திய ரூபாயாகவோ அல்லது தங்கமாகவோ பெற்றுக்கொள்ளலாம். ஒரு வேளை தங்கமாக பெற்றுக்கொள்ள முதலீட்டாளர் விரும்பினால் 0.2 சதவீதம் நிர்வாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் முதலீடு செய்யப்பட்ட தங்கத்துக்கான வட்டி ரொக்கமாக மட்டுமே வழங்கப்படும்.
இந்த மாற்றத்தால் கோயில்களில் உள்ள தங்கம் கணிசமாக இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.
இந்த திட்டம் கடந்த நவம்பர் 5-ம் தேதி தொடங்கப்பட்டது. நடுத்தர கால டெபாசிட் (5-7 வருடம்) மற்றும் நீண்ட கால ( 12-15 வருடம்) திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தங்கத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் குறுகிய கால டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் தங்கத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆரம்பத்தில் விதி இருந்தது. இப்போது மூன்று வகை யான திட்டங்களில் செய்யப்படும் தங்கத்தையும் திரும்ப பெற்றுக் கொள்ள முடியுமாறு மத்திய அரசு மாற்றம் செய்திருக்கிறது.