இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.3,597 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவன லாபம் முந்தைய காலாண்டைக் காட்டிலும் 3.8 சதவீ தம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக எதிர் பார்ப்புக்கும் அதிகமாக லாபம் ஈட்டி வருகிறது இன்ஃபோசிஸ். நிறுவனத்தின் காலாண்டு வருமானம் ரூ.16,550 கோடியாகும். எதிர்பார்க்கப்பட்ட வருமானம் ரூ.16,460 கோடியாகும்.
நிறுவனத்தின் கடந்த நிதி ஆண்டு லாபம் ரூ.13,491 கோடி யாகும். முந்தைய நிதி ஆண்டில் ஈட்டியதைக் காட்டிலும் லாபம் 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல வருமானம் 17 சதவீதம் அதிகரித்து ரூ.62,441 கோடியைத் தொட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் (2016-17) நிறுவனத்தின் வருமான வளர்ச்சி 11.5 சதவீதம் முதல் 13.5 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. நிறுவனம் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.14.25 தொகையை டிவிடெண் டாக அறிவித்துள்ளது.
மூத்த இயக்குநர்களான மொகித் ஜோஷி, எஸ்.ரவிகுமார் மற்றும் சந்தீப் தத்லானி ஆகியோர் தலைவர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்று முதல் நிதி ஆண்டில் நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருப்பது மிகவும் பெருமையளிப்பதாக நிறுவனத்தின் சிஇஓ விஷால் சிக்கா குறிப்பிட்டார்.