மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பற்றிய கவலை நிலவி வருகிறது. பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.
இந்தநிலையில் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டித்தும் வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது.
இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாதத்தில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. பின்னர் சற்று ஏற்றம் கண்டது. இந்தநிலையில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 557 புள்ளிகள் ஆரம்பத்திலேயே வீழ்ச்சி அடைந்தது. இன்று காலை 10 மணி அளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 557 புள்ளிகள் குறைந்து 58487 என வர்த்தகமாகியது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 172 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 435 என்ற நிலையில் இருந்தது. இதன் பிறகும் சரிவு தொடர்ந்தது.
பிற்பகல் 12:04 நிலவரப்படி சென்செக்ஸ் 1,056 புள்ளிகள் அல்லது 1.79 சதவீதம் குறைந்து 57,981 ஆக வர்த்தகமாகியது. என்எஸ்இ நிப்டி 317 புள்ளிகள் அல்லது 1.80 சதவீதம் சரிந்து 17,301 ஆக வர்த்தகமாகி வருகிறது.
நிப்டி மிட்கேப் 100 இன்டெக்ஸ் 1.42 சதவீதம் சரிந்ததால் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளும் எதிர்மறையாகவே உள்ளது. ஸ்மால் கேப் பங்குகள் 2.09 சதவீதம் குறைவாக வர்த்தகமாகியது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 88.70 டாலராக அதிகரித்துள்ளது.