வணிகம்

டோலோ 650க்கு இப்படியொரு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை: மைக்ரோ லேப்ஸ் தலைவர் திலீப் சுரானா சுவாரஸ்ய பேட்டி

செய்திப்பிரிவு

டோலோ 650க்கு இப்படியொரு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என மைக்ரோ லேப்ஸ் மருந்து நிறுவனத்தின் தலைவர் திலீப் சுரானா தெரிவித்துள்ளார்.

கரோனா கோர தாண்டவமாடிய மார்ச் 2020 முதல் டோலோ 65 மாத்திரை ரூ. 567 கோடிக்கு விற்பனையாகி, தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.

இந்நிலையில், இந்த விற்பனை குறித்தும் மக்கள் கொடுத்த ஆதரவு குறித்தும் நிறுவனத்தின் தலைவர் திலீப் சுரானா மனிகன்ட்ரோல் இணையதளத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

அவரது பேட்டியிலிருந்து:

நாங்கள் ஏற்கெனவே பாராசிட்டமால் 500mg யை விற்றுவந்தோம். அப்போதுதான் மேம்படுத்தப்பட்ட வித்தியாசமான பாராசிட்டமாலை சந்தைப்படுத்த விரும்பினோம். அதற்காக மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தோனோம். காய்ச்சலால் ஏற்படும் வலி, அலுப்பை சரிசெய்வதில் ஒரு இடைவெளி இருப்பதை உணர்ந்தோம். அதனால், டோலோ 650 ஐ உருவாக்கினோம். இப்படித்தான் 1993ல் டோலோ 650 புழக்கத்துக்கு வந்தது. அதன் வடிவம் நோயாளிகள் விழுங்க சுலபமாக இருக்க வேண்டும் என்பதால், அதை ஓவல் வடிவத்தில் உருவாக்கினோம்.

டோலோ 650 எப்போதுமே மருத்துவர்களின் விருப்பமான பரிந்துரையாக இருந்துள்ளது. ஆனாலும் அண்மைக்காலத்தில் அதற்குக் கிடைத்த வரவேற்பு நாங்கள் சற்றும் எதிர்பார்க்காதது. இதற்கு நிறைய காரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கரோனாவின் முக்கிய அறிகுறியே காய்ச்சலும் உடல் வலியும் தான். அதற்கு டோலோ 650 நல்ல தீர்வைத் தந்தது. தனிமைப்படுத்துதலின் போதும், ஊரடங்கின் போதும் மருத்துவர்கள் நோயாளிகளை நேரடியாகக் காணாததால் அவர்களுக்கு பிரிஸ்க்ரைப் பண்ணப்பட்ட டோலோ 650 வாட்ஸ் அப் மூலமாகவும் வாய்ஸ் மெசேஜ் மூலமாகவும் பரவியது. ஒரு நோயாளியிடமிருந்து இன்னொரு நோயாளிக்கு தகவல் பரவியது. அப்படித்தான் நாடு முழுவதும் எல்லா குடும்பங்களையும் டோலோ 650 சென்று சேர்ந்தது.

டோலோ 650, தடுப்பூசி திட்டத்தை ஊக்கப்படுத்தியது. நாங்கள் எங்கள் நிறுவனம் சார்பில் தடுப்பூசி முகாம்களில் டோலோ 650, மாஸ்க் மற்றும் சானிட்டைசர் வழங்கினோம். தடுப்பூசிக்குப் பின்னர் காய்ச்சல் வந்தால் அவர்களுக்கு டோலோ 650 எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

கரோனா முதல், இரண்டாம் அலைகளின் போது நாடு முழுவதும் 650 மருத்துவ பிரதிநிதிகளும், மேலாளர்களும் டோலோ 650 எல்லாப் பகுதிக்கும் சென்று சேர்வதை உறுதி செய்தனர்.
அடுத்ததாக, மைக்ரோ லேப்ஸின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவானது வலி நிவாரணிகள், இதய நோய், சர்க்கரை நோய், கண் நோய், சரும வியாதிகள், தீவிர சிகிச்சை ஆகியனவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நோய்கள் சார்ந்த தெரபி மருந்துகள் தான் எங்களின் இலக்கு.

இந்த பெருந்தொற்றுக் காலம், எங்களுக்குப் பல படிப்பினைகளைக் கொடுத்துள்ளது. ஊரடங்கில் ஒரு கோர் டீமை உருவாக்கி அதன் மூலம் மற்ற ஊழியர்களை ஒருங்கிணைத்துப் பணி செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தது. ஷிஃப்ட், ஒர்க் ஃப்ரம் ஹோம் முறைகளைக் கற்றுக் கொடுத்தது. அதைவிட முக்கியமானது வியாபார தொய்வையெல்லாம் கருதாமல் நாங்கள் எங்களுடைய ஒவ்வொரு ஊழியரின் நிதி நிலைமையையும் கவனித்துக் கொண்டோம். ஜெனரிக் மருந்துகள் விற்பனையில் பிராண்டிங் மிகவும் முக்கியம். ஆனால் நாங்கள் ஒருபோதும் டோலோ 650ஐ விளம்பரம் செய்ததில்லை. மாறாக மருத்துவர்களிடம் எங்கள் பிராண்டை முன்னிலைப்படுத்தி அவர்களின் நம்பிக்கையை வென்றோம். மருத்துவர்களின் பரிந்துரைகள் தான் எங்களின் விளம்பரம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT