நாடு சுதந்திரம் அடைந்ததன் 75 வது ஆண்டை முன்னிட்டு 75 வாரங்களில் 75 யூனிகார்ன் நிறுவனங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய தொழில்துறைக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.
நாஸ்காம் (NASSCOM) டெக் ஸ்டார்ட்-அப் அறிக்கை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் , "மார்ச் 12, 2021 அன்று 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' இயக்கம் தொடங்கியதில் இருந்து 45 வாரங்களில் 43 யூனிகார்ன்களை சேர்த்துள்ளோம். இந்த 75 வார காலப்பகுதியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குறைந்தபட்சம் 75 யூனிகார்ன்களை உருவாக்குவதை இலக்காக கொள்வோம். ஸ்டார்ட்அப் இந்தியா ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புரட்சியைத் தொடங்கியது.
இன்று ‘ஸ்டார்ட்அப்’ என்பது பொதுவான சொல்லாக மாறிவிட்டது. இந்திய ஸ்டார்ட்அப்கள், இந்தியா தொழில்துறை வளர்ச்சிக் கதையின் சாம்பியன்களாக வலம் வருகின்றன. உலகளாவிய ஸ்டார்ட்அப் நிலப்பரப்பில் இந்திய நிறுவனங்கள் அழுத்தமான அடையாளத்தை பதிவிட்டு வருகின்றன.
பெருந்தொற்றுக்கு முந்தைய அளவை விட அதிக முதலீடுகளை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஈர்த்துள்ளன. எட்டெக், ஹெல்த்டெக் மற்றும் அக்ரிடெக் உள்ளிட்ட பல வாய்ப்புகளை அச்சமின்றி துரத்திச் செல்லும் இந்திய ஸ்டார்ட்-அப்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றிய ஆண்டாக 2021 நினைவுகூரப்படும். பயணம், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைகள் கணிசமாகக் குறைந்திருந்தபோது, ஏப்ரல்-டிசம்பர் 2021க்கான சேவைகள் ஏற்றுமதி 178 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது.
புதுமைகளுக்கான கலாச்சாரத்தை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்வதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், ஜனவரி 16-ம் தேதியை தேசிய ஸ்டார்ட் அப் தினமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடனான பிரதமரின் உரையாடல், நமது புதுமையாளர்களுக்கு மிகவும் உற்சாகம் அளித்துள்ளது. ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலை மேம்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.