வணிகம்

5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள்: புதிய சாதனை படைத்த இந்திய அஞ்சலக வங்கி

செய்திப்பிரிவு

இந்திய அஞ்சலக வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளது என்று தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

கிராம மக்களுக்கு எளிதாக வங்கி சேவைகளை வழங்கும் நோக்கில் ‘இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க்’ (IPPB) என்ற புதிய திட்டம் கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. தங்களது பணத்தை சேமிக்க விரும்பும் நபர்கள் இந்த திட்டத்தின் மூலமாக அருகில் உள்ள தபால்காரருக்குத் தகவல் தெரிவித்தால் போதும் அவரே உங்கள் இல்லம் தேடிவந்து புதிய கணக்கு ஆரம்பித்து கொடுப்பார். இது தான் இந்த திட்டத்தின் சிறப்பம்சம். இந்த அஞ்சலக வங்கி சேவை தொடங்க ஆதார் மற்றும் தொலைபேசி எண் இருந்தால் மட்டுமே போதுமானது.

ஆரம்பத்தில் நாடு முழுவதும் 650 கிளைகள் மற்றும் 3,250 சேவை மையங்களை கொண்டு தொடங்கப்பட்ட இந்திய அஞ்சலக வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 5 கோடியை தாண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசின் தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் :

"நாட்டில் அனைவருக்கும் நிதி சேவை என்ற மிகப் பெரிய முன்முயற்சியை மேற்கொண்டு பிரதமர் தொடங்கிய டிஜிட்டல் வங்கி சேவையான இந்திய அஞ்சலக வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5 கோடியை தாண்டி, நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் வங்கிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

3 ஆண்டு காலத்தில் இந்த எண்ணிக்கையை தொட்டு அஞ்சலக வங்கி வேகமாக வளர்ந்து வருகிறது. காகிதமற்ற சேவையை அளித்து வரும் அஞ்சலக வங்கி, நாடு முழுவதும் உள்ள 1.36 லட்சம் அஞ்சலகங்களில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 1.20 லட்சம் கிராமப்புறங்களில் உள்ளன. நாட்டில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் அஞ்சலக ஊழியர்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடிமட்ட அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை இந்த வங்கி கொண்டு சேர்த்துள்ளது.

அதேபோல் 13 மொழிகளில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுவாரஸ்யமாக, அஞ்சலக வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் சுமார் 48% பெண்கள் மற்றும் 52% ஆண்கள். 41% க்கும் அதிகமான கணக்கு வைத்திருப்பவர்கள் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள்.

சுமார் 98% பெண்களின் கணக்குகள் தபால்காரர்களால் அவர்களின் வீட்டுக்கே நேரடியாக சென்று தொடங்கப்பட்டவை. டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் பொறுத்தவரை இளைஞர்கள் அதனை அதிகமாக பெற்றுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT