புதுடெல்லி: இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதியை 1டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு அதிகரிக்கும் வகையில், வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்த்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியளித்துள்ளார்.
முன்னணி ஐடி தொழில் நிறுவன தலைவர்களிடையே காணொலி மூலம் உரையாற்றிய கோயல் கூறியதாவது:
‘‘இந்த ஆண்டு வர்த்தக ஏற்றுமதி 400 பில்லியன் டாலர்கள் இலக்கை எட்டும் பாதையில் இந்தியா பயணிக்கிறது. சேவை ஏற்றுமதி சுமார் 240 பில்லியன் முதல் 250 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும். இது மிகவும் குறைவாக இருந்த போதிலும், வர்த்தக ஏற்றுமதியை எட்டிப் பிடிக்கும் வகையில் வளர்ச்சி அடைய முடியும்.
இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஐடி மையங்களை தொடங்க ஐடி தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதை வரவேற்கிறோம். இது ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், அந்தப் பகுதி வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவும். ஐடி தொழில் நிறுவனங்கள் நகரங்களை அடையாளம் கண்டால், மத்திய அரசு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.