வணிகம்

இந்தியாவில் ஆயுள் காப்பீடு வசதியை விரிவுபடுத்த எல்ஐசி, ஹீரோ இன்சூரன்ஸ் புரோக்கிங் நிறுவனம் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மற்றும் ஹீரோ இன்சூரன்ஸ் புரோக்கிங் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் இணைந்து இதுவரையில் காப்பீடு வசதிகள் கிடைக்காத பகுதிகளுக்கும் இத்திட்டங்கள் சென்று சேர்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிய இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது. இதன் மூலம் இரண்டாம் நிலை நகரங்கள், கிராமப்பகுதிகளிலும் காப்பீட்டுத் திட்டங்களை இவ்விரு நிறுவனங்களும் கூட்டாக விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளன.

எல்ஐசி நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 3,550 வாடிக்கையாளர் சேவை மையங்கள் (2,048 கிளைகள், 113 வட்டார அலுவலகங்கள், 8 மண்டல அலுவலகங்கள், 1,381 துணை அலுவலகங்கள் உள்ளன. ஹீரோ புரோக்கிங் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 2,700 வாடிக்கையாளர் இணைப்பு மையங்கள் உள்ளன இவ்விரு நிறுவனங்களும் இணைவதன் மூலம் அதிக அளவிலான மக்களை காப்பீடு வலையில் இணைக்க முடியும்.

ஹீரோ புரோக்கிங் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் வலுமான டிஜிட்டல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அத்துடன் அதிக அளவிலான முகவர்களை (பிஓஎஸ்) கொண்டுள்ளது. இவர்கள் மக்களுடன் நேரடியான தொடர்பில் இருப்பவர்கள். வாடிக்கையாளர்களுக்கு தேவையான விஷயங்களை உணர்ந்து அவர்களுக்குரிய காப்பீட்டு திட்டங்களை வழங்க வழி ஏற்பட்டுள்ளது.

``எல்ஐசி, ஹீரோ ஆகிய இரு நிறுவனங்களின் பிராண்டுமே மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றவை. இந்தியர்களின் காப்பீடு தேவையை உணர்ந்து இரு நிறுவனங்களும் செயல்படுபவை. எல்ஐசி வகுத்துள்ள காப்பீட்டுத் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொருந்தும் வகையிலானவை. அத்துடன் அவை தரும் லாபமும் பாதுகாப்பும் அதிகம். அதேசமயம் இழப்பீடுகளை வழங்கும் விகிதமும் அதிகமாகும். ஹீரோ நிறுவனம் இணைந்ததன் மூலம் எல்ஐசியின் வர்த்தகம் மேலும் அதிகரிக்கும். இரு நிறுவனங்களும் இணைந்து கிராமப்புற மக்களுக்கு தேவையான காப்பீடு திட்டங்களை வழங்க வழியேற்பட்டுள்ளது,’’ என்று ஹீரோ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஷெபாலி முன்ஜால் குறிப்பிட்டுள்ளார்.

``இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களுள் முதன்மையான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். புரோக்கிங் நிறுவனமாக இருந்தாலும் வெறுமனே காப்பீடு திட்டங்களை விற்பனை செய்வது மட்டுமின்றி, மக்களின் தேவையை உணர்ந்து உரியதை பரிந்துரைக்கும் பணியையும் செய்கிறது. வாடிக்கையாளர்களின் நிதி இலக்குகளை அவர்கள் தேர்வு செய்யும் காப்பீட்டு திட்டங்கள் மூலம் எட்டுவதற்கு வழிகாட்டும் பணிகளையும் நிறுவனம் செய்கிறது.

எல்ஐசி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்ததன் மூலம் காப்பீட்டு திட்டங்களை மக்களிடையே சென்று சேர்ப்பது, விழிப்புணர்வை உருவாக்குவது உள்ளிட்டவற்றுக்கு வழியேற்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மிகச் சிறந்த காப்பீட்டுத் திட்டங்களை எடுப்பதற்கான முடிவை மேற்கொள்ளவும் வழிகிடைத்துள்ளது,’’ என்று ஹீரோ இன்சூரன்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

எல்ஐசி நிறுவனம் 32 வகையான காப்பீட்டுத் திட்டங்களை வைத்துள்ளது. பலதரப்பட்ட மக்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவகையிலும், மக்களின் மாறிவரும் வாழ்க்கை சூழலில் அவர்களது நிதி இலக்கை எட்டுவதற்கேற்ற வகையிலும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

எண்டோமென்ட், டெர்ம் அஷ்யூரன்ஸ், ஓய்வூதியம், உடல் நல காப்பீடு மற்றும் யூனிட்-டுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவை இதில் முக்கியமானவையாகும். 2020 – 21-ம் ஆண்டில் புதிதாக 2.1 கோடி புதிய பாலிசிகளை எல்ஐசி வழங்கியுள்ளது.

ஹீரோ இன்சூரன்ஸ் புரோக்கிங் நிறுவனம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது. தொழில்நுட்ப ரீதியில் வலுவான கட்டமைப்பை உருவாக்கி மேம்பட்ட சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. நேர்முகமாகவும், டிஜிட்டல் மூலமாகவும் பரிவர்த்தனை மேற்கொள்ளும் சூழலை உருவாக்கித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT