சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஸ்திரமற்ற நிலை உருவாகி விலை அதிகரித்து வருவதால் இந்தியாவின் நிதி நிர்வாகத்துக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று மத்திய நிதித்துறைச் செயலர் அர்விந்த் மாயாராம் தெரிவித்தார்.
தேக்க நிலை பொருளாதாரத்திலிருந்து மீட்சியடைந்து வரும் இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். இராக்கில் ஏற்பட்டுள்ள சமீபத்திய போர் பதற்ற சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
2014-ம் ஆண்டில் இராக்கிலிருந்து 1.87 கோடி டன் கச்சா எண்ணெய் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இறக்குமதி செய்ய திட்டமிட்டு இதில் 50 சதவீத அளவுக்கு ஏற்கெனவே இறக்குமதியாகியுள்ளது. கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு எடுத்து வருகிறது என்றார் அர்விந்த் மாயாரம்.