அரசு பத்திரங்களில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஹெச்.ஆர்.கான் தெரிவித்தார். இதுகுறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் இந்திய பத்திரங்களில் 3,000 கோடி டாலர் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதில் 1,000 கோடி டாலர் வெளிநாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள், பென்சன் ஃபண்ட்கள், இன்ஷூரன்ஸ் ஃபண்ட்கள் ஆகியவை முதலீடு செய்ய முடியும்.
கடந்த வருடம் பணவீக்கத்துக்கு எதிரான வருமானம் கொடுக்கக்கூடிய பத்திரங்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டன. ஆனால் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இது குறித்து பேசிய துணை கவர்னர் கான், தவறான சூழ்நிலையில் அவை வெளியிடப்பட்டிருக்கலாம். கூடிய விரைவில் புதிய மாற்றங்களுடன் அவை வெளியிடப்படும் என்றார். அந்த பத்திரங்களில் காலாண்டுதோறும் வட்டி கொடுப்பதைப் பற்றி யோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிதாக இரண்டு வங்கிகளுக்கு மட்டும் அனுமதி கொடுத்த விவகாரத்தில் அதிருப்தி இருக்கலாம். விரைவில் இது குறித்து புதிய வரைமுறைகள் கொண்டுவரப்படும் என்றார்.