புதுடெல்லி: நாட்டின் பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய வெளிநாட்டு நாணயப் பத்திர வெளியீட்டின் மூலம் சுமார் 30,000 கோடி ரூபாயை கடனாக திரட்டியுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்று இந்த அளவுக்கு வெளிநாட்டு கரன்சி பத்திரம் வெளியீட்டின் மூலம் நிதி திரட்டுவது இதுவே முதல்முறையாகும்.
மூன்று தவணை வெளியீடுகளின் மூலம் பெறும் வருவாயை தற்போதுள்ள கடன்களை திருப்பிச் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொகை மூன்று தவணைப் பத்திரங்கள் 10-ஆண்டு, 30-ஆண்டு மற்றும் 40-ஆண்டு முதிர்ச்சியைக் கொண்டவை. அவை யுஎஸ் ட்ரெஷரீஸ் பெஞ்ச்மார்க் அடிப்படைப் புள்ளிகள் (பிபிஎஸ்), 160 பிபிஎஸ் மற்றும் 170 பிபிஎஸ் ஆகும்.
2032 இல் 2.875% மதிப்புள்ள 1.5 பில்லியன் டாலர் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் போது, 2052 இல் 30 ஆண்டுகளில் 3.625% மதிப்புடைய 1.75 பில்லியன் டாலர் என்ற அளவில் முதிர்ச்சியடைகின்றன.2062 இல் 40 ஆண்டுகளில் 3.750% முதிர்ச்சியடைந்த 750 மில்லியன் டாலராக இருக்கும்.
ஆசியாவிலேயே ஜப்பான் அல்லாத ஒரு நாட்டில் இருந்து இந்த அளவுக்கு முதலீட்டு தொகை திரட்டப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
ஓன்ஜிசி விதேஷ் லிமிடெட்டின் 2014 -ம் ஆண்டு 2.2 பில்லியன் டாலர் பத்திரங்கள் வெளியீட்டு சாதனை படைத்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த வெளியீடு இந்த பழைய சாதனையை முறியடித்து, இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வெளிநாட்டு நாணயப் பத்திரப் பரிவர்த்தனை என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிதி அதிகாரி ஸ்ரீகாந்த் கூறுகையில், “மார்க்யூ சர்வதேச மூலதன சந்தை முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதி ஆதரவு என்பது எங்களது மின்சாரம், நுகர்வோர் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் எங்கள் அடிப்படை வணிகங்களின் வலிமையை பிரதிபலிக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 75,000 கோடி முதலீடு செய்வதாக கடந்த ஆண்டு அறிவித்தது. 2035 ஆண்டுக்குள் கார்பன் இல்லாத மின் உற்பத்தி என்ற தனது இலக்கை அடைய இது வழிவகுக்கும் என தெரிவித்து இருந்தது. குஜராத்தின் ஜாம்நகரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஐந்து ஜிகா திறன் கொண்ட தொழிற்சாலைகளை நிறுவுகிறது. ஏற்கெனவே இதற்கான பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.