வணிகம்

ரெட்பஸ் நிறுவனர் வெளியேறினார்

செய்திப்பிரிவு

ரெட்பஸ் நிறுவனர் பணிந்திரா சாமா அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். தன்வசம் இருந்த பங்குகளை ஐ.பி.ஐ.பி.ஓ. குழுமத்திடம் கடந்த வருடம் விற்றார். தெற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம் ரூ.780 கோடிக்கு ரெட் பஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது.

சாமாவுடன் சேர்ந்து, சக நிறுவனரான சரண் குமார் ராஜுவும் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். கடந்த 12 மாதங்களாக ஐ.பி.ஐ.பி.ஓ குழுமத்தின் தலைமையின் கீழ் வேலை பார்த்தது சிறப்பாக இருந்தது என்று சாமா தெரிவித்துள்ளார். சாமா விலகியதைத் தொடர்ந்து பிரகாஷ் சங்கம் அந்த நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஐ.பி.ஐ.பி.ஓ குழுமத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஐ.எம். கொல்கத்தாவில் படித்த பிரகாஷ், இதற்கு முன்பு நௌக்ரி குழுமத்தின் இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார்.

மேலும் ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களில் மார்க்கெட்டிங், சேல்ஸ், பிராண்டிங் ஆகிய பிரிவுகளில் வேலை பார்த்திருக்கிறார். பிரகாஷைத் தொடர்ந்து ரோஹன் பட்நாயக் செயல் பாட்டு தலைவராகவும், அனுப் மேனன் தலைமை தொழில் நுட்ப அலுவலராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தங்களது பங்களிப்பை கொடுத்த சாமா மற்றும் சரண் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக ஐ.பி.ஐ.பி.ஓ. குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் காஷ்யப் தெரிவித்தார்.

அவர்கள் இருவரும் சிறப்பான தொழில் முனைவோர்கள் எதிர்காலத்தில் இன்னும் பல விஷயங்களை அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT