வணிகம்

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஒமைக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.

2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் 8முறை வட்டி வீதம் மாற்றப்படவில்லை.

நிதிக் கொள்கை குறித்து முடிவு எடுக்கும் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு மும்பையில் கூடி விவாதித்தது. இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் நிறைவடைந்த பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து சக்தி காந்ததாஸ் கூறியதாவது:

குறுகிய கால கடன் வட்டிவிகிதம் 4%ஆக நீடிக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35%ஆக நீடிக்கிறது.

இதன்மூலம் தொடர்ச்சியாக 9வது முறையாக வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடருகின்றன. ரொக்க கையிருப்பு விகிதம்(சிஆர்ஆர்) 4 சதவீதத்திலும், எஸ்எல்ஆர் விகிதம் 18 சதவீதத்திலும் தொடரும்.

நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதத்தில் நீடிக்கும். நான்காம் காலாண்டில் மொத்த விலை பணவீக்கம் உயர வாய்ப்புள்ளது. நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.3 சதவீதமாக தக்கவைக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் கடந்த செப்டம்பர் மாதத்தை விட அக்டோபரில் சில்லறை வர்த்தக பணவீக்கம் 4.35 சதவீதத்தில் இருந்து 4.48 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக அளவில் பொருளாதார வேகம் அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ப வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு மாற்றங்கள் எதையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை.

SCROLL FOR NEXT