புதிய பயிர்க் காப்பீட்டு திட்டமான பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனாவை செயல்படுத்துவது குறித்து அனைத்து வங்கிகள் மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங் களின் உயர் அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் சந்தித்து விவாதிக்க இருக்கிறார்.
விவசாயிகள் சுமையை குறைப் பதற்காகவும் இழப்பீடை உடனடி யாக வழங்குவதற்காகவும் பிர தான் மந்திரி பீமா பசல் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
மார்ச் 22-ம் தேதி மும்பை நபார்டு அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சந்திப்பு நடைபெற இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நிதியமைச்சகம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த இரண்டு மணி நேர விவாதத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
கடன் பெற்ற விவசாயிகள் மட்டுமல்லாமல் கடன் பெறாத விவசாயிகளும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். கடன் பெற்றுள்ள விவசாயிகளை அதிகம் இந்த பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் இதன் முக்கிய நோக்கம். ஏற்கெனவே 50% விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் வந்துவிட்டனர். தற்போது 19.44 கோடி ஹெக்டேர் மொத்த விளை நிலத்தில் 25% காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்கு 8.5 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 75,000 கோடி ரூபாய் பயிர்க் காப்பீடுக்கு ஒதுக்கப்பட்டிருப் பதால், விவசாயிகள் அதிக கடன் பெற முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.