வணிகம்

வோடபோன், கெய்ர்ன் நிறுவனங்கள் மீதான வரி விதிப்பை ரத்து செய்ய முடியாது: வருவாய்த்துறைச் செயலர் ஆதியா தகவல்

பிடிஐ

வோடபோன் மற்றும் கெய்ர்ன் எனர்ஜி நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட வரியை முற்றிலுமாக ரத்து செய்ய முடியாது என்று வருவாய்த்துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு அந்நிறுவனங்களுடன் பேச அரசு தயாராக இருப்பதாக பலமுறை தெரிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விரு நிறுவனங்களும் செலுத்த வேண்டிய வரித்தொகையை செலுத்த முன்வந்தால் வட்டி மற்றும் அபராத தொகைகளை அரசு ரத்து செய்யலாம் என்று குறிப்பிட்டார்.

செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இதற்கு முன்பு கூட அரசு இவ்விரு நிறுவனங்களும் விதிக்கப்பட்ட வரித் தொகையை செலுத்த முன்வந்தால், வரித்தொகை மீதான வட்டி மற்றும் அபராதம் உள்ளிட்டவற்றை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதுவும் இப்பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக் கொள்ள முன்வந்தால் இத்தகைய சலுகையை அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது என்று ஆதியா குறிப்பிட்டார்.

இந்நிலையில் 2016-17-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இரு நிறுவனங்களுக்கும் முறைப்படியான அழைப்பை விடுத்தார். அரசுக்கென்று சில வரம்புகள் உள்ளது. அந்த வரம்புக்கு உட்பட்டு செயல்படத் தயாராக இருப்பதாக அப்போது ஜேட்லி குறிப்பிட்டதையும் ஆதியா சுட்டிக் காட்டினார்.

அரசின் எல்லை எது என்பது பட்ஜெட்டில் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. எனவே அந்த எல்லைவரை செல்ல முடியும். வட்டி, அபராதம் இவற்றைத் தள்ளுபடி செய்வதுதான் அதிகபட்சமாக அளிக்க முடிந்த சலுகையாகும்.

முன்தேதியிட்டு விதிக்கப்பட்ட வரி விதிப்பை ஏன் இந்த அரசால் கைவிட முடியவில்லை என்று கேட்டதற்கு, வருமான வரிச் சட்டம் முன் தேதியிட்டு விதிக்கப்பட்ட நடைமுறை முந்தைய காங்கிரஸ் அரசால் மேற்கொள்ளப்பட்டது. அதை தற்போதைய பாஜக தலைமையிலான அரசால் முழுவதுமாக நீக்க முடியாது என்று ஆதியா பதிலளித்தார்.

முன் தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறையை முந்தைய அரசு மேற்கொண்டது. அதை இந்த அரசு முற்றிலுமாக நீக்கினால் அது சரியான நடவடிக்கையாக இருக்காது. அதனாலேயே வட்டி மற்றும் அபராதத் தொகையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு 2006-ம் ஆண்டு ரூ.10,247 கோடி வரி செலுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது. கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் இந்திய நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடும் முன்பாக பங்குகளை மாற்றி ஆதாயமடைந்ததாகவும், அதற்கு வரி செலுத்தும்படி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோல பிரிட்டனைச் சேர்ந்த வோடபோன் நிறுவனம் இந்தியாவில் உள்ள ஹட்சிசன் நிறுவனத்தின் பங்குகளை 2007-ம் ஆண்டு வாங்கியது தொடர்பாக 1,100 கோடி டாலர் வரி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

பங்கு பரிமாற்றம் இந்தியாவுக்கு வெளியே நடைபெற்றதால் இதற்கு வரி செலுத்தத் தேவையில்லை என வோடபோன் நிறுவனம் பதில் அளித்ததோடு வழக்கு தொடர்ந்துள்ளது.

வரி செலுத்த முடியாது என்று இரு நிறுவனங்களும் மறுத்தால் என்ன செய்வது என்று ஆதியாவிடம் கேட்டதற்கு, அது இரு நிறுவனங்கள் எடுக்கும் முடிவு. அதேசமயம் வரியை வசூலிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றார்.

நீண்ட காலமாக வழக்கில் உள்ள வரி தொடர்பான பிரச்சினைக்கு ஒரு முறை சமரச தீர்வு அளிக்க பட்ஜெட்டில் வகை செய்யப்பட்டுள்ளதாக ஜேட்லி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT