சால்வ் நிறுவன ஊழியர்கள், தலைமைச் செயல் அதிகாரி அமித் பன்சால். 
வணிகம்

சால்வ் நிறுவன வலைதள விற்பனை ரூ.1,200 கோடி

செய்திப்பிரிவு

இணையதளச் சந்தையான சால்வ் (SOLV), தற்போது ரூ.1200 கோடி விற்பனையைக் கடந்துள்ளது.

இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரும், வணிக நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான மூலப்பொருள் அல்லது விற்பனைப் பொருட்களைப் பெரு நிறுவனங்கள் மற்றும் பிற நபர்களிடமிருந்து வாங்க வகை செய்யும் (B2B) பன்னாட்டு நிதித்துறை குழுமமான ஸ்டாண்டர்ட் சார்ட்டட் தொடங்கியுள்ளதுதான் இந்த சால்வ் வலைதளமாகும். தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடையாத நிலையில் இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சந்தையில் மளிகை வியாபாரியில் தொடங்கி… நவீன டிசைனில் ஆடை வடிவமைக்கும் தொழிலதிபர்… வீட்டு உபயோகத்துக்குத் தேவையான பொருட்களை நவீன முறையில் தயாரித்து விற்பனை செய்பவர்கள் வரை என… யார் வேண்டுமானாலும், எந்தப் பொருளை வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்.

இவ்விதம் லட்சக்கணக்கான நபர்கள் தற்போது இந்த இணையச் சந்தையில் தங்களது பொருட்களை விற்பனை செய்யப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நம்பகமான ஒரு வணிகச் சூழலை சால்வ் வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில், இந்த இணையச் சந்தையில் விரைந்து விற்பனையாகும் நுகர்பொருட்களான சோப்பு, பல்பொடி, பிரஷ் உள்ளிட்ட பொருட்கள், டிவி, ஃபிரிட்ஜ், மின்விசிறி, அயர்ன் பாக்ஸ், மின் அடுப்பு உள்ளிட்ட இதர எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டுத் தேவைகளான திரைச் சீலைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட துணி ரகங்கள், நவீன வடிவமைப்பு கொண்ட ஆடை ரகங்கள் போன்றவற்றுடன் உணவகங்கள் மற்றும் உணவுத் தயாரிப்பு தொழில் செய்வோருக்கான பல்வேறு தேவைகள் எனப் பல்வேறு பொருட்கள் மொத்த விலையில் பெருமளவு விற்பனையாகின்றன.

இந்தியா முழுவதுமுள்ள பல நகரங்களில் உள்ளோர் இந்தச் சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதும், வாங்குவதும் நடைபெறுகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பின், சால்வ் வணிக தளத்தில் மளிகைப் பொருட்கள், பிற நுகர்பொருட்கள் எனப் பலவும் மிகப் பெரிய அளவில் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக, அன்றாட உபயோகப் பொருட்கள், தனிநபர் சுகாதாரம் சார்ந்த பொருட்கள், உடல் ஆரோக்கியம் தொடர்பான பொருட்கள் அதிக அளவில் கைமாறி வருகின்றன

ஒவ்வொரு வணிகரும் சரியான நபர்களைத் தேர்வு செய்து அவர்களிடம் பொருட்களை வாங்க முன்வந்தால், அவை குறித்த நேரத்தில் தேவையான இடத்துக்குச் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் செயல்பாடுகள் முழுவதும் டிஜிட்டல் முறையில் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மூலப்பொருட்களை உற்பத்தி முனையில் வாங்குவதில் தொடங்கி, அது தேவையான இடத்துக்குப் பயணமாகி, இறுதி இலக்கை எட்டுவது வரை அனைத்தும் தங்கு தடையின்றி ஒரே சீராக நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது.

அதோடு, அதற்கான ரசீது… பணம் செலுத்துவது… மறுதரப்பில் விற்பனை ரசீது பெறுவது… விற்ற பொருளுக்குரிய பணம் பெறுவது என அனைத்தும் உறுதியான டிஜிட்டல் கட்டமைப்புக்குள் வருவதால் தொழிலை நிர்வகிப்பதிலும் சிரமங்கள் இல்லாமல் எளிதாக முன்னேறிச் செல்ல முடிகிறது. இதனால், ஒருபக்கம் செலவுகள் குறைந்து சிக்கனமும், மறுபுறம் தரமான பொருட்கள் கிடைப்பது உறுதியாவதால், விற்பனையைத் தொடர்ந்து அதிகரிப்பதும் சாத்தியமாகிறது.

தற்போதைய நிலையில் சால்வ் பி 2 பி வணிக தளம் நாளொன்றுக்கு சராசரியாக 350 டன் பொருட்களைக் கொண்டுசேர்க்கிறது. அதோடு, இதில் குறைந்தது 70%க்கும் அதிகமானவர்கள் மறுமுறையும் அதே நபரிடம் பொருட்களை வாங்குகிறார்கள் எனவும், அது பலமுறை என அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சால்வ் வலைதளத்தில் தனது பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வணிகர்களின் முழு பின்னணி விவரம் குறித்து தகவல் சேகரித்து சரி பார்க்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம், அடுத்த 12 மாதங்களில் இந்தத் தளம் மூலம் நடைபெறும் வணிகத்தின் அளவை 2 மடங்கைத் தாண்டி அதிகரிக்க திட்டமிடப்படுகிறது.

இதற்கு உதவும் வகையில், ஏற்கனவே இத்தளத்தில் விற்பனையாகும் பொருட்களைத் தாண்டி, தற்போது புதிதாக காலணிகள், சிறு மற்றும் பெரு உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள், தனி நபர் தேவைகள் என பல பொருட்கள் சேர்க்கப்பட உள்ளன. அதோடு, புதிதாக 50க்கும் அதிகமான நகரங்களில் உள்ள மிகச்சிறிய வணிகர்களைக்கூட இந்தச் சந்தையில் இணையச் செய்ய திட்டமிடுவதால், மேற்கண்ட இலக்கை எட்டுவது எளிதாகும் என நம்பப்படுகிறது.

சால்வ் தளத்தின் வளர்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைமைச் செயல் அதிகாரி அமித் பன்சால், “தொடங்கியது முதலே நாங்கள் இவ்வணிகத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் உற்பத்தியாளரில் தொடங்கி, இறுதிக்கட்ட நுகர்வோரான சில்லறை வணிகர் வரை முழு பொருள் பரிமாற்ற வலைப் பின்னலையும் - டிஜிட்டல் மயமாக்கியுள்ளோம். அதனால், எந்த நிலையிலும் சிக்கல் இல்லாமல், நடப்புகள் அனைத்தும் 100 சதம் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே சால்வ் வலைதளம் மூலம் நாம் முன்வைக்கும் உறுதியான பரிமாற்றங்கள் பன்மடங்காக அதிகரிப்பதோடு, அதன்மூலம் உற்பத்தியாளர் தரப்பில் ஏற்பட வாய்ப்புள்ள சுமுகமான பொருளாதாரச் சூழல் சிறு, குறு, நடுத்தரத் தொழிலதிபர்களின் வாழ்வு மேம்பட சால்வ் உத்தரவாதமளிக்கிறது.

அவ்வகையில் இந்தியாவில் இதுவரையில்லாத அளவாக கிட்டத்தட்ட 6.3 கோடி மக்களுக்குச் சம வாய்ப்பு அளிக்கப்படுவதை எங்களது தொழில்நுட்பம் உறுதி செய்கிறது. எனவே தொடர்ந்து எங்களது சேவையை மற்ற தொழிலதிபர்களுக்கும் விரிவாக்கம் செய்வதோடு, முறையான வணிக அணுகுமுறை எல்லாத் தரப்பிலும் ஏற்படுத்துவதிலும் சால்வ் வலைதளம் கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.

இதுதவிர, "சால்வ் வலைதளம் மூலம் வணிகத்தில் ஈடுபடும் அனைவருக்கும் அவர்தம் செயல்பாடுகளை மதிப்பிட்டு சால்வ் மதிப்பு குறியீடு வழங்கப்படுகிறது. இதனால், இதுவரை டிஜிட்டல் உலகில் அடையாளம் இல்லாமல் இருந்த ஏராளமான சிறு வணிகர்கள் தங்களுக்கென ஒரு மதிப்பு குறியீட்டைப் பெறுகிறார்கள். அந்தக் குறியீடு, மற்ற சிறு, குறு, நடுத்தர வணிகர்களிடையே, உற்பத்தியாளர்களிடையே தனி அடையாளமாக மதிக்கப்படுகிறது. உதாரணமாக, இந்திய நிதித்துறையில் தற்போது நிலவும் கடன்தகுதி மதிப்பீட்டு முறைகளுக்குள் வராத நபர்களும், இந்த சால்வ் மதிப்பீட்டை அடிப்படையாக வைத்து டிஜிட்டல் தளம் வழங்கும் சிறப்புக் கடன் வசதியைப் பெறலாம்.

அதாவது பொருட்களை வாங்கும்போது உடனே அதற்கான பணத்தைச் செலுத்தாமல், பின்னர் செலுத்தும் வாய்ப்பைப் பெறமுடியும். இத்தகைய கடன் வசதி மிகக் குறைந்த அளவாக ரூ.3000 வரை கூட வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தத் திட்டம் புதிதாகத் தொடங்கப்பட்டதில் இருந்து, இது ஒவ்வொரு மாதமும் சராசரியாக 100 சதவீத அளவு வளர்ச்சி கண்டு வருகிறது. அந்த அளவு சிறு, குறு, நடுத்தர தொழிலதிபர்கள்… வணிகர்கள் இந்தக் கடன் வசதியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து ஏற்பட்டு வரும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சால்வ் டிஜிட்டல் தளம் தனது பணியாளர்கள் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதோடு, புதிதாகப் பணியமர்த்தப்படுபவர்களில் பெரும் பகுதியினரை இரண்டாம் நிலை நகரங்களில் மற்றும் அதையொட்டியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் இருந்து செயல்படுபவர்களாக பார்த்துக் கொள்ளவும் அவர்களது வேலை நேரம் நிரந்தரமாக ஒரே மாதிரியாக இல்லாமல், அவரவர் விருப்பத்திற்கேற்ப மாற்றித் தேவையானபோது, தேவையானபடி அமைத்துக் கொள்ளும் வகையிலும் பார்த்துக் கொள்ளப்படும்" என்று அமித் பன்சால் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT