இங்கிலாந்தைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் ரூ.29,000 கோடி வரி செலுத்துமாறு வருமான வரித்துறை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் இந்த ஆண்டில் முன் தேதியிட்டு விதிக்கப்பட்ட வரி தொடர்பாக நோட்டீஸ் பெறும் இரண்டாவது நிறுவனமாகும். முன்னதாக வோடோபோன் நிறுவனத்திற்கு இதுபோன்ற நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடும் முன்பே தாய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி நிறுவனத்திற்கு பங்கு களை மாற்றி ஆதாயமடைந்ததாக வும் அதற்கு வரி செலுத்துமாறும் வருமான வரித்துறை கூறியிருந்தது. கெய்ர்ன் நிறுவனம் 10,247 கோடி ரூபாய் ஆதாய மடைந்துள்ளதாக மதிப்பீட்டு வரைவு ஒன்றை 2014-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி வருமான வரித்துறை கெய்ர்ன் நிறுவனத் துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் கடந்த மாதம் இறுதி மதிப்பீட்டு உத்தரவை வருமான வரித்துறை அனுப்பியுள்ளது.
பங்குகளை மாற்றியதன் மூலம் ரூ.10,247 கோடியும் அதற்கு வட்டி மொத்தம் 18,800 கோடி ரூபாயும் மதிப்பீட்டு உத்தரவில் கூறப்பட்டிருந்ததாக கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் கூறியுள்ளது.
நிறுவனங்களுக்கு முன் தேதியிட்டு வரி விதிக்கப்படாது என்று மத்திய அரசு குறிப்பிடும் அதே நேரத்தில்தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016-17-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் முன் தேதியிட்டு வரி விதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அடிப்படை தொகையை கட்டினால் வட்டி மற்றும் அபராதம் ஆகியவற்றிலிருந்து சலுகை அளிக்கப்படும் என்று ஒருமுறை சமரச தீர்வு ஒன்றை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்புக்கு முன்பே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வருமான வரி விதிகள் படி, மதிப்பீட்டு உத்தரவு வழங்கிய 2 வருடங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கெய்ர்ன் நிறுவனம் சர்வதேச தீர்ப்பாயத்தை நாடியுள்ளது.
எங்களுடைய நிறுவனத் திற்குள் மறு சீரமைப்பு செய்வதற்கு எப்படி முன் தேதியிட்டு வரி விதிக்கமுடியும் என்று கெய்ர்ன் நிறுவனம் இதை எதிர்த்து வருகிறது.