நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜனவரி வரை) எஸ்.எம்.இ. நிறுவனங்கள் ஐபிஓ மூலம் 287 கோடி ரூபாய் திரட்டி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் (2014-15) மொத்தமாக திரட்டியதை விட இந்த பத்து மாதங்களில் அதிக தொகை திரட்டப்பட்டிருக்கிறது.
கடந்த 2014-15-ம் ஆண்டில் 39 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் 278 கோடி ரூபாயை மட்டுமே திரட்டியுள்ளன. மேலும் பல நிறுவனங்கள் ஐபிஓவுக்கு விண்ணப்பித்திருப்பதால் மேலும் பல நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆறு மாதங்களில் நாட்டின் பல வேறு நகரங்களில் இருந்து எஸ்எம்இ நிறுவனங்கள் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிறு நிறுவனங்களிடையே சாதகமான சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாக பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
லாஜிஸ்டிக்ஸ், சேவைகள், கட்டுமானம் உள்ளிட்ட பல துறையைச் சேர்ந்த நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
எஸ்எம்இ நிறுவனங்கள் பட்டியலிடுவதற்காகவே பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவை தனியாக ஒரு வாய்ப்பை உருவாக்கின. கடந்த 2012 மார்ச் முதல் இவை செயல்பட்டு வந்தன. அதன் பிறகு பல நிறுவனங்கள் எஸ்எம்இ பிரிவில் பட்டியலிடப்பட்டு முக்கிய பட்டியலுக்கு சென்றன.
ஸ்நாப்டீலுடன் ஜே.எல்.எல். ஒப்பந்தம்
ரியல் எஸ்டேட் துறை ஆலோசனை நிறுவனமான ஜே.எல்.எல். ஸ்நாப்டீல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் வீடுகளை வாங்க முடியும்.
இந்த இரு நிறுவனங்களும் அடுத்த இரு வருடங்களுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. வீடு தொடர்பான அத்தனை சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. முன்னதாக ஜே.எல்.எல். நிறுவனம் பிரத்யேகமான இணையதளம் ஒன்றினை இம்மாத ஆரம்பத்தில் தொடங்கியது.
ஸ்நாப்டீல் இணையதளத்தில் வீடு வாங்குபவர்களுக்கு எந்த விதமான தரகும் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்நாப்டீல் நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரியல் எஸ்டேட்டுக்கு தனிப்பிரிவை தொடங்கியது.