வணிகம்

`பங்குச் சந்தையில் பெரிய ஏற்றம் வர வாய்ப்பில்லை’

ஏ.கே.பிரபாகர்

சிறப்பான பட்ஜெட் என்று இதனைக் கொண்டாட முடியாது. அதேபோல மோசமான பட்ஜெட் என்று ஒதுக்கித் தள்ளவும் முடியாது. சாதகங்கள் மற்றும் பாதகங்கள் இரண்டும் கலந்தே இந்த பட்ஜெட்டில் இருக்கின்றன. முக்கிய விஷயம் என்னவென்றால் அடுத்த நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கை 3.5 சதவீதம் என்ற அளவில் கட்டுப்படுத்த முடியும் என்று நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். இது சாதகமான விஷயம். இதனால் ரிசர்வ் வங்கி எந்த நேரமும் வட்டி விகிதத்தை குறைக்கலாம். 0.25 சதவீத வட்டி குறைப்பு இன்னும் சில வாரங்களில் நாம் ரிசர்வ் வங்கியிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் தேவையான முதலீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இருந்தாலும் கூடுதலாக எவ்வளவு முதலீடு செய்யப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. ஏற்கெனவே முதலீடு செய்யப்போவதாக அறிவித்த ரூ.25,000 கோடி மட்டுமே முதலீடு செய்யப்படும். கூடுதல் முதலீடு குறித்து தெளிவான திட்டங்கள் வரும்போது பொதுத்துறை வங்கிப் பங்குகளின் நிலைமை தெரியும்.

விவசாயத்துறை பங்குகள் உயர்வு

இந்த பட்ஜெட்டில் விவசாயத்துக்கு அதிக முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளால் மான்சான்டோ இந்தியா, பிஐ இண்டஸ்ட்ரீஸ், ராலிஸ் இந்தியா உள்ளிட்ட விவசாய துறை பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல பாசனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் ஜெயின் இர்ரிகேஷன், பினோலெக்ஸ், சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்ததால், கட்டுமானத்துறைக்கு கூடுதல் முதலீடுகள் செய்யவில்லை. அதேபோல நெடுஞ்சாலைகளை பொருத்தவரை நடப்பாண்டை போலவே அடுத்த நிதி ஆண்டிலும் 10,000 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது இந்த துறை பங்குகளுக்கு ஊக்கம் அளிக்கும் நடவடிக்கையாகத் தெரியவில்லை.

ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் பல ஆட்டோமொபைல் பங்குகள் சரிந்தன. இருந்தாலும் கிராமப்புற பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் எம் அண்ட் எம் பங்கு உயர வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது பங்குச் சந்தையை உயர்த்துவதற்கான பெரிய அறிவிப்புகள் இல்லை. தவிரவும் சர்வதேச அளவிலும், உள்நாட்டு அளவிலும் பங்குச் சந்தைக்கு சாதகமான சூழல் இல்லை. அதனால் இந்த வருடம் முழுவதும் பங்குச் சந்தையில் பெரிய ஏற்றம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை.

பங்குச்சந்தை வீழ்ச்சி

நேற்றைய வர்த்தகத்தின் போது 10 லட்ச ரூபாய்க்கு மேல் டிவிடெண்ட் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானபோது பங்குச்சந்தை கடுமையாக சரிந்தது. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேலே கூட சரிந்தது. அதன் பிறகு நிதிப்பற்றாக்குறை குறித்த அறிவிப்பு வந்த சமயத்தில்தான் பங்குச்சந்தைகள் மேலே உயர தொடங்கின. இதனால் வர்த்தகத் தின் இடையில் 6869 என்ற முக்கிய மான புள்ளியை நிப்டி தொட்டது.

டெக்னிக்கலாக பார்க்கும் போது 7255 புள்ளிகளை நிப்டி கடக்காத வரையில் பங்குச் சந்தையில் சரிவு இருக்கும். 6600, 6357 புள்ளிகள் வரை நிப்டி செல்லலாம்.

ak.prabhakar@idbicapital.com

SCROLL FOR NEXT