வணிகம்

காய்கறி, சமையல் எண்ணெய் விலை ஏற்றம்; விலை உயர்வு- கடும் மழை எதிரொலி

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கடுமையான மழை காரணமாக காய்கறி, சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக காய்கறி விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக வெங்காயம், தக்காளியின் விலை திடீரென உயர்ந்துள்ளது. கோல்கட்டாவில் தக்காளி விலை கிலோவுக்கு 90 - 93 ரூபாய் வரை விற்பனையானது. கத்திரிக்காய் கிலோ 60ல் இருந்து 100 ரூபாயை தொட்டுள்ளது. காய்கறிகளின் விலைகள் 15 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விலை கடந்தாண்டை விட குறைவு தான் என மத்திய அரசு விளக்கம் அளித்தது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களின் விலை உயர்வும், பல மாநிலங்களில் மழை பெய்து வருவதும் காய்கறிகள் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

குறிப்பாக உத்தர பிரதேசம் தவிர வேறு சில மாநிலங்களில் காய்கறி பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் தொடர்ந்து விலை உயர்வு இருக்கும் எனத் தெரிகிறது. இதுபோலவே சமையல் எண்ணெய் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உலகளாவிய விலை உயர்வு காரணமாக சமையல் எண்ணெயின் விலை இந்தியாவில் உயர்ந்து வருகிறது. இதனையடுத்து இறக்குமதி வரி குறைக்கப்பட்ட பிறகு சமையல் எண்ணெய்களின் விலை குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் எழுதியது.

இதுபோலவே நாட்டின் முக்கிய சந்தைகளில் 67,357 மெட்ரிக் டன் வெங்காயம் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தவிர நுகர்வோர் விவகாரத்துறை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கிலோ ரூ.21-க்கு வெங்காயம் வழங்கியுள்ளது.

2021-22ம் ஆண்டில் 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை 2.08 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல் உருளைக்கிழங்கின் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT