அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மான்சான்ட்டோ தனது பி.டி. பருத்தி விதைகளின் விலைகளைக் குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதையடுத்து, தங்களது இந்திய வர்த்தகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்று அச்சுறுத்தியுள்ளது.
ராயல்டி மதிப்பை குறைப்பது உட்பட பி.டி. பருத்தி விதைகளின் விலைகளை இந்த பயிர் ஆண்டில் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த டிசம்பரில் மான்சாண்டோவின் இந்திய கூட்டாளி நிறுவனமான மேய்க்கோ மான்சாண்டொ பயோடெக் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிறுவனம் பி.டி. பருத்தி விதை தொழில்நுட்பத்திற்காக 2002-ம் ஆண்டு முதல் உள்நாட்டு விதை நிறுவனங்கள் சிலவற்றுக்கு துணை-உரிமங்கள் வழங்கியுள்ளது.
தற்போது ராயல்டி மதிப்பு உட்பட பி.டி. விதைகளைக் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து மான்சாண்டோ வின் இந்திய கூட்டாளியான எம்.எம்.பி.எல். நிறுவன இந்திய தலைமைச் செயலதிகாரி ஷில்பா திவேகர் கூறும்போது, “பி.டி. காட்டன் விதைகள் மீது அரசு அமைத்த குழு பெரிய அளவிலான, கட்டாய விலைக்குறைப்பை வலியுறுத்தினால், அதாவது அதன் ராயல்டி மதிப்பு உட்பட விலைகள் குறைப்பை வலியுறுத்தினால் இந்தியாவில் மான்சாண்ட்டோ தனது வர்த்தகத்தையும் இருப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.
எம்.எம்.பி.எல். நிறுவனம் தற்போது பி.டி.போல்கார்ட் 1 விதைகளுக்கு பாக்கெட் ஒன்றிற்கு ரூ.122.96 ராயல்டி மதிப்பு அல்லது டிரெய்ட் கட்டணம் வசூலித்து வருகிறது. அதே போல் பி.டி.போல்கார்ட் 2-ம் வகையின விதைகளுக்கு பாக்கெட் ஒன்றிற்கு ராயல்டி மதிப்பு அல்லது டிரெய்ட் கட்டணமாக ரூ.183.46 வசூலித்து வருகிறது.
இந்நிலையில் இந்த கட்டணங்களைக் குறைப்பது, இந்தியாவுக்குள் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வருவதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சிகளுக்காகச் செலவிட்ட தொகைகளை மீண்டும் எடுக்க முடியாத நிலையே ஏற்படும் என்கிறார் மான்சாண்ட்டோ இந்திய கூட்டாளி நிறுவன தலைமைச் செயலதிகாரி ஷில்பா திவேகர்.
அவர் மேலும் கூறும்போது, “கடந்த 19 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள 70 லட்சம் பருத்தி விவசாயிகளுக்கு சேவையாற்றுவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இது பயன்களில் பிரதிபலித்துள்ளது” என்றார்.
இந்நிலையில் வேளாண் அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழு ஒன்று விதை விலையையும் ராயல்டி கட்டணம் பற்றிய பரிந்துரைகளையும் விரைவில் மேற்கொள்ளவிருக்கிறது.