வணிகம்

மெர்சிடஸின் புல்லட் புரூஃப் கார் விலை ரூ.10.50 கோடி

பிடிஐ

சொகுசு கார் தயாரிப்பு நிறுவன மான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் அதிக விலை கொண்ட மேபாஷ் 600 ரகக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் டெல்லி விற்பனையக விலை ரூ.10.60 கோடியாகும்.

தனி நபர் பயன்படுத்தும் கார்களில் அதிக பாதுகாப்புத் தன்மை கொண்ட காராக இது கருதப்படுகிறது. ஜெர்மனியில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு இது இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு புணேயில் உள்ள சக்கன் தொழிற்பேட்டையில் ஆலை உள்ளது. இங்கு பிற மாடல் கார்கள் தயாராகின்றன. இப்புதிய ரக அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மேபாஷ் 600 கார் மட்டும் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் இந்த கார் அறிமுகமான 15 நாளில் இந்தியாவில் இந்தக் கார் அறிமுகம் செய்யப்படுவதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ரோலண்ட் ஃபோல்கர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அம்சம்

இந்தக் காரின் கதவுகள் மற்றும் கண்ணாடிகள் துப்பாக்கி தோட்டாக்களைத் தடுக்கும் திறன்கொண்டது.

சர்வதேச அளவில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்தக்காரை வெளிநாட்டு தூதுவர்கள், பெரும் தொழில திபர்கள், சினிமா பிரபலங்கள் பெரிதும் தேர்வு செய்வர் என்று ஃபோல்கர் தெரிவித்தார்.

இந்தக் காரின் எடை 4.7 டன் (4,700 கிலோ) ஆகும். மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத் தயாரிப்புகளில் அதிக விலை கொண்டதும் இந்தக் கார்தான். கேபினில் வெளிக்காற்று வரும் வசதி. தீயணைப்பு வசதி உள்ளது. இவை தாமாக ஆபத்து காலத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிக எடையுள்ளதாக இருந்தாலும் 7.9 விநாடிகளில் இந்தக் கார் 100 கி.மீ. வேகத்தை தொட்டுவிடும். இதில் அதிகபட்சம் மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

SCROLL FOR NEXT