கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.
கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய்க்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை அதிகரிக்கவில்லை.
மேலும் சூறாவளி தாக்கியதால் அமெரிக்க வளைகுடா மெக்ஸிகோ பகுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தியை பாதித்தன.இதனாலும் கச்சா எண் ணெய் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது.
உலகளாவிய எரிசக்தி நிறுவனங்கள் தங்கள் கையிருப்பில் இருந்து அதிக கச்சா எண்ணெயை விற்பனை செய்துள்ள நிலையில் உற்பத்தி அதிகரிக்க வில்லை. அமெரிக்க கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச கையிருப்பை வைத்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு பீப்பாய் 80 டாலர்களாக உயர்ந்தது. இந்த உயர்வு தொடர்ந்து காணப்படுகிறது.
உற்பத்தியை வேகமாக அதிகரிக்க ஓபக் நாடுகள் மறுத்ததைத் தொடர்ந்து, எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு பல ஆண்டுகளுக்கு பிறகு 83 டாலரை எட்டியது. இது நவம்பர் 2014 க்குப் பிறகு அதிகபட்ச விலையாகும்.
பிரெண்ட் கச்சா எண்ணெய் $ 83.47 ஆக உயர்ந்தது, அக்டோபர் முதல் 2018 வரை அதிகபட்சம், அமெரிக்க கச்சா எண்ணெய் $ 79.78 ஆக உயர்ந்தது.
கரோனா தொற்றுநோயிலிருந்து உலகம் மீண்டும் பொருளாதார சுழற்சி காணப்படுவதாலும் இதனால் பணவீக்கம் அதிகரிப்பாலும் கச்சா எண்ணெய் ப்ரெண்ட் இந்த ஆண்டு 50%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன.
இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது.