ஓலா நிறுவனம் மீது உபெர் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. உபெர் நிறுவனத்துக்கு போலியான எண்களில் இருந்து ஓலா புக் செய்கிறது. அந்த எண்ணுக்கு உபெர் நிறுவனத்தின் கார் ஓட்டுனர்கள் அழைப்பு செய்ய முடியாது. இதனால் டிரைவர்கள் 10 முதல் 15 நிமிடம் வரை காத்திருந்துவிட்டு சென்று விடுகின்றனர் என்று ஓலா மீது உபெர் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருக்கிறது. நஷ்ட ஈடாக 49.61 கோடி ரூபாயும் ஓலா வழங்க வேண்டும் என்று உபெர் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை ஓலா மறுத்திருக்கிறது. மேலும் போட்டி நிறுவனங்கள் மீது இப்படி செய்யும் நோக்கம் இல்லை என்றும் ஓலா தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விபின் சாங்கி இந்த வழக்கினை வரும் செப்டம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இது குறித்து ஓலா நிறுவனத்துக்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. இது குறித்து நான்கு வாரத்தில் ஓலா நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஓலா பதில் மனு தாக்கல் பிறகு அடுத்த நான்கு வாரத்தில் இது குறித்து உபெர் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 14-ம் தேதி நடக்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.
ஓலா நிறுவனத்தின் பணியாளர்கள் போலியாக 93,000 கணக்குகளை இந்தியா முழுவதும் உருவாக்கி, உபெர் நிறுவனத்துக்கு போலியான முன்பதிவினை செய்திருக்கின்றனர். அதன் பிறகு இந்த முன்பதிவு ரத்து செய்யப்பட்டதால் உபெர் நிறுவனம் தன்னுடைய டிரைவர்களுக்கு ரத்து கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 4 லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ரத்து கட்டணமாக மட்டும் 5 லட்ச ரூபாயை உபெர் செலுத்தி இருக்கிறது என்பது உபெர் நிறுவனத்தின் புகாராகும்.
இந்த நிலையில், ஓலா நிறுவனத்தின் பணியாளர்கள் போலியான கணக்கை தொடங்கி னார்கள் என்ற உபெர் நிறுவனத் தின் குற்றச்சாட்டு ஊகத்தின் அடிப்படையிலானது என்று ஓலா தெரிவித்துள்ளது. மேலும் போட்டியை ஒழுக்கமற்ற முறை யில் உபெர் கொண்டு செல்வதாக ஓலா புகார் தெரிவித்திருக்கிறது.